இலங்கைக்கு பெருமை சேர்த்த யுபுன் அபேகோன், பாலித்த பண்டார

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இலங்கை நேரப்படி நேற்று (04) அதிகாலை 2 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை யுபுன் 10.14 விநாடிகளில் பூர்த்தி செய்து மூன்றாம் இடம் பிடித்தார்.

இந்தப்போட்டியில் கென்ய வீரர் பெர்டினாண்ட் ஓமயாலா போட்டித்தூரத்தை 10.02 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருந்ததுடன், தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பைன் 10.13 விநாடிகளில் போட்டித்தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதில், 00.01 விநாடி வித்தியாசத்தில் யுபுன் அபேகோன் வெள்ளிப்பதக்கத்தை தவறவிட்டிருந்தார்.

முன்னதாக யுபுன் அபேகோன் அரையிறுதியின் போட்டித்தூரத்தை 10.20 விநாடிகளில் நிறைவுசெய்து நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டதுடன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். எனினும் சிறந்த நேரப்பிரதியை பதிவுசெய்ததன் காரணமாக அவருக்கு இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் ஒன்றை வென்ற முதல் ஆசிய வீரராக யுபுன் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமன்றி பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் இலங்கை வெல்லும் நான்காவது பதக்கம் இதுவாகும். எனினும் 1998க்குப் பின்னர் தடகளப் போட்டியில் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.

இதற்குமுன் டன்கன் வைட் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்டுகளுக்கான 440 மீற்றர் தடைதாண்டி ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்ததுடன், அதன் பின்னர் ஸ்ரீயானி குலவன்ச வெள்ளி பதக்கத்தையும் (1998 – பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டம்), அதே ஆண்டில் சுகத் திலகரட்ன வெண்கலப்பதக்கத்தையும் (ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம்) வென்றுக்கொடுத்திருந்தனர்.

இதேவேளை இலங்கை சார்பில் பொதுநலவாய விளையாட்டு விழாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான பரா பரிதி வட்டம் எறிதல் எப்42 பிரிவு போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார, இலங்கைக்கு முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றுகொடுத்துள்ளார்.

அவர் முதல் முயற்சியில் 39.54 மீற்றர் தூரத்துக்கு பரிதி வட்டத்தை எறிந்து குறைந்த தூரத்துடன் போட்டியை ஆரம்பித்திருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் ஒவ்வொன்றிலும் தூரத்தை அதிகரித்துக்கொண்டு 44.20 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றுகொடுத்துள்ளார்.

இந்தப்போட்டியில், வேல்ஸைச் சேர்ந்த அலெட் டேவிஸ் மற்றும் ஹெரிஸன் வோல்ஸ் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொண்டனர்.

இந்த வெற்றிகளுடன் இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இதுவரை ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.


Add new comment

Or log in with...