திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தகடுகளை பயன்படுத்தியே துப்பாக்கிச் சூடு

- தங்களது வாகனங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தகடுகளை பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எனவே தங்களது வாகனங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காலி, காலி துறைமுகம், திஸ்ஸமஹாராம, அஹுங்கல்ல, கதிர்காமம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வாகன இலக்கத் தகடு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் அண்மையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, கடந்த ஜூலை 31 ஆம் திகதி தரத்கம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இடம்பெற்ற கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு, ஜூலை 05ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் திருடப்பட்டது என தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த ஜூன் 26ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் கார் ஒன்றில் வந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை புரிந்த குற்றத்திற்கும் சந்தேகநபர்கள் பயன்படுத்தி வந்திருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடும் பேருவளை பிரதேசத்தில் களவாடப்பட்ட வாகன இலக்கத் தகடு என தெரிய வந்துள்ளது.

அத்துடன் கடந்த வாரங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு  மேற்கொண்ட கொலைச் சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்வது தொடர்பில் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அந்தந்த வாகனங்களுக்கு உரியவை அல்ல எனவும் போலியானவை எனவும், அவை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து களவாடப்பட்ட வாகன இலக்கத் தகடுகள் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள் வாகன இலக்கத் தகடுகளின் திருடும் சம்பவங்கள், இவ்வாறான குற்றச் செயல்களின் முன்கூட்டிய திட்டமாக இருக்குமா என்பது தொடர்பில் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய தங்களது மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை வீதியின் அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் நிறுத்தி வைக்கும் போது, குறிப்பாக இரவு வேளையில் அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், குற்றவாளிகளுக்கு வாகன இலக்க தகடுகளை இலகுவாக திருடிச் செல்லும் வாய்ப்பை குறைக்கும் வகையில் செயற்படுமாறும், மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்திவிட்டு செல்லாதிருக்குமாறும் பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றவுடன் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...