செளபாக்கியங்கள் வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் வரலெட்சுமி விரதம்

பொருளில்லாதோருக்கு இவ் உலகில்லை அருளில்லாதோர்க்கு அவ்வுலகில்லை என்பதற்கு அமைவாக மானிடர்களை சீர்தூக்கிப்பார்க்கும் செல்வத்திற்கு அதிபதியான மகாலஷ்மிக்குரிய விரதமான வரலெட்சுமி விரதம் சகல வீடுகள் மற்றும் ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றது.

பெண்களால் வரலெட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுவது சகலவிதமான செல்வயோகங்கள், செளபாக்கியங்கள், புத்திரப்பேறு, கன்னிப்பெண்களுக்கு மனம் ஒத்த கணவன் போன்ற சகல ஐஸ்வரியங்களையும் வேண்டியாகும். ஆவணி மாத பெளர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையான இன்று (05) வீடுகளிலும் ஆலயங்களிலும் இவ்விரதத்தினை நோற்பதுடன், ஒன்பது ஆண்டுகள் தொடர்சியாக ஆனுஷ்டித்தல் விரதத்தின் நியதியும் பெண்களுக்கு சிறப்புமாகவும் அமைந்துள்ளது.

வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு அனைத்து இந்து ஆலயங்களிலும் சிறப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து மஞ்சள் நிறத்தால் ஆன காப்பினை பிரசாதமாக பெற்றுக் கொண்டு அணிந்து கொள்வதும் வழக்கமாகும்.

இவ்வேளையில் விரத்த்தின் மகிமையினை அறிந்து கொள்வது சிறப்பாகும்.

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உள்ளன. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாபவிமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்.

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் வரலெட்சுமி விரதத்தின் போது, திருமணமான சுமங்கலிப் பெண்கள் விரதம் இருந்து, வீடுகளில் லட்சுமி ஆவகணம் செய்து வழிபாடு நடத்தி, குங்குமம், பூ, வெற்றிலை, துணிமணிகள் உள்ளிட்டவற்றை ஏனைய பெண்களுக்கு வழங்கி வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, உலகம் முழுவதும் வாழுகின்ற இந்து மக்களால் இன்று வரலெட்சுமி நோன்பு, அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

இப்புனிதமான நன்னாளில் மகாலெட்சுமி தேவியினை விரதமிருந்து பூசித்து அவளின் அருட்கடாட்சத்தினை பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்வோமாக.

ஆர். நடராஜன் ஹரன்
பனங்காடு


Add new comment

Or log in with...