20 வருடத்துக்கு முன் பொருட்படுத்தியிருப்பின் இன்றைய நெருக்கடி எமக்கு ஏற்பட்டிருக்காது!

உடல் மற்றும் மனம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கங்களுமே பிரதான காரணம். காலை எழுந்தவுடன் கோப்பி அல்லது தேநீர், ஒன்லைனில் புதுப்புது வகையான உணவு வகைகள், இரண்டு கிலோ மீட்டர் பயணத்திற்கு கூட வீட்டு வாசலில் முச்சக்கரவண்டி, சிறு உடல் உபாதைகளுக்கும் சிறப்பு மருத்துவர், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைத் தெரியாது ஆனால் முகநூலில் எங்கோ இருப்பவர்களுடன் நட்பு பாராட்டும் வழக்கம், நினைத்தவுடன் வீட்டுக்கே வந்து சேரும் சிற்றுண்டிகள், மேலைநாட்டு உணவுகள்...

இவ்வாறு இன்றைய மனிதன் பழகி விட்டான். அதன் காரணமாக புதுப்புது நோய்களும், மனஉளைச்சலும் மக்களுக்கு வந்து விட்டன.

40,000 ஆண்டுகளுக்கு முன்புதான் சமையல் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சமையல், பல்வேறு பரிணாம வளர்ச்சியடைந்து பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றல் வடிவமாக மாற்றமடைந்துள்ளது.

உணவுகளை சமைப்பதற்கு சக்தி மிக முக்கியமான அங்கமாக இருக்கின்றது. மின்சாரம், எரிவாயு, இயற்கை எரிவாயு, மண்ணெண்ணெய், விறகு போன்றவற்றைப் பயன்படுத்தி உணவுகளை தயாரிக்கின்றோம்.

இந்த மாற்றம் மனிதனின் அன்றாட செயற்பாடுகளை இலகுவாக்கியதுடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய உணவுகளை தயாரிப்பதற்கும் பழகிக் கொண்டான். எரிவாயு, மின்சாரம் என்பன மனிதத் தேவைக்கு இன்றியமையாதவையாக திகழ்கின்றன.

எமது முன்னோர் விறகு பயன்படுத்தி உணவு சமைத்தனர். ஆனால் தற்போதைய நகரமயமாக்கலினால் அடுக்குமாடி குடியிருப்புகளில் விறகு பயன்படுத்தி உணவு சமைப்பதென்பது இயலாத விடயமாக மாறியுள்ளது.

மனிதனின் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு சக்தி வளங்கள் எக்காலமும் கிடைக்குமாக இருந்தால் இவற்றைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. ஆனால், நாம் அந்த காலகட்டத்தைத் தாண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எரிவாயு, எரிபொருள் போன்ற சக்தி வளங்களை பணம் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். இது எவ்வளவு காலத்துக்கு சாத்தியமென்பது யாருக்கும் தெரியாது.

எரிபொருள், எரிவாயுவுக்கு இலங்கையில் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என 20 ஆண்டுகளுக்கு முன்னரே அறியப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிலையான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவில்லையெனவும் மொரட்டுவை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை மீள் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் முன்னாள் பணிப்பாளர் நாயகமுமான துசித்த சுகதபால தெரிவித்துள்ளார்.

சக்தி மற்றும் சுற்றாடல் தொடர்பான ஊடகவியல் கற்கை நெறியின் மூன்றாவது கருத்தரங்கு மீள்புதுப்பிக்கத்தகு சக்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் 'சமையலுக்கான சக்தி' என்ற தலைப்பில் கருத்துரைத்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனிதன் இயற்கையோடு வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். எமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை படிப்பினையாகக் கொண்டு நாமும் எமது வாழ்க்கை முறையினை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கை போன்ற சிறிய தீவுகளால் தொடர்ந்தும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை தாங்கிக் கொள்ள முடியாது.

தற்போதைய எரிபொருள், எரிவாயு பிரச்சினை உலக நாடுகளுக்கும் பொதுவானது. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை தொடர்பாக 20 வருடங்களுக்கு முன்னரே ஆரூடம் கூறப்பட்டது. ஆனால், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்று கடந்தகால அரசாங்கங்களால் முன்வைக்கப்படவில்லை.

எரிபொருள், எரிவாயு ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் உணவு சமைப்பதற்கு மாற்றுவழிகள் இல்லாமல் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தினால் பல்வேறு அடுப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அவற்றுக்கு ஊக்குவிப்பு வழங்கி போதிய பிரசாரம் செய்யப்படவில்லை. எனவே மக்களும் அது பற்றி கவனம் செலுத்தவில்லை.

இன்றைய சூழ்நிலையில் சமையல் அடுப்பும் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளதுடன் நாடளாவிய ரீதியில் புதிய உற்பத்திகளுக்கு பாரிய கேள்வியும் ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் புதிய புதிய சமையல் அடுப்புகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் விறகினைப் பயன்படுத்தி உணவு சமைப்பதில் கிராமிய மக்கள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில், டொலர் கொடுத்து வாங்கப்படும் எரிசக்திகளுக்கு பதிலாக இயற்கையாகக் கிடைக்கும் சக்தி வளங்களான விறகு, மரத்தூள், சிரட்டைக்கரி போன்றவற்றின் மூலம் சமைப்பதற்கான பழக்கத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இந்தப் பொருட்களை உள்நாட்டில் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

நாம் இவற்றைப் பயன்படுத்துவதால் வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகளுக்கு வழங்கும் பணம் சேமிக்கப்படுவதுடன் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெரும் உந்துசக்தியாக அமையும் என சிரேஷ்ட விரிவுரையாளர் துசித்த சுகதபால மேலும் தெரிவித்தார்.

எம்.ஐ.நிஷாம்தீன்


Add new comment

Or log in with...