பொறுப்பற்ற பயண முகவர் ஒருவரால் விமானநிலையத்தில் பரிதவித்த முதியவர்!

விமானப் பயணம் செல்வோருக்கு இதுவொரு அனுபவப் பாடமாக அமையட்டும்!

கொழும்பில் வசிக்கின்ற நான், 75 வயது நிரம்பிய எனது மாமாவை அவசரமாக சென்னைக்கு பயணம் அனுப்ப வேண்டியிருந்தது. அவருக்கு விமானப் பயணச்சீட்டை ஏற்பாடு செய்வதற்காக கடந்த 18. 07.2022 அன்று காலை பம்பலப்பிட்டியில் இயங்கும் Travel Agent நிறுவனம் ஒன்றுக்குச் சென்று சென்னை செல்வதற்காக எனது மாமாவுக்காக விமான பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டேன்.

பயணத் திகதி 30.07.2022 அன்று அதிகாலை 2.50 ஆகும். நாம் நண்பகலுக்குப் பின்னர் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தோம். வழமையான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் எனது மாமாவை விமானநிலையத்தின் உள்ளே அனுப்பி விட்டு நான் வீடு திரும்ப ஆயத்தமான போது, மாமா உள்ளே இருந்து பதற்றமாக எங்களை நோக்கி விரைந்து வந்தார்.

அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்:

"போர்டிங் கார்ட் வழங்கும் கவுண்டரில் என்னிடம் அறிவித்தலொன்றை கூறுகிறார்கள். ஒன்லைன் பதிவொன்று உள்ளதாகச் சொல்கிறார்கள். எமது Travel Agency ஐ அணுகி அந்தப் பதிவை செய்து கொண்டு வருமாறு கூறுகிறார்கள்".

இவ்வாறு எனது மாமா கூறினார்.

விமானம் புறப்படவிருக்கும் இறுதி நேரத்தில் இப்படியொரு அறிவிப்பைக் கூறி எங்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டதால் நாம் தடுமாறிப் ​போனோம். எமது பயண முகவர் நிறுவனத்தின் பிரதிநிதியை நாம் தொடர்பு கொண்ட போதிலும் அவரிடமிருந்து பதிலில்லை.தொடர்ந்து நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவரிடமிருந்து பதிலில்லை.

பின்பு நான் இணையத்தில் தேடி பல விடயங்களை அலசி ஆராய்ந்து அந்த ஒன்லைன் பதிவை முடிக்கும் போது விமானம் புறப்படும் நேரம் வந்து விட்டது. எனது மாமனார் பதற்றத்தில் நடுங்க ஆரம்பித்து விட்டார்.

அவர் 75 வயது முதியவர். அதுவும் விமான நிலையத்தின் உள்ளே கண்ணாடித் தடுப்பின் மறுபக்கம் நிற்கின்றார். அவருடன் சரியாகப் பேசவும் என்னால் முடியவில்லை. ஒருவாறு ஒன்லைன் பதிவு முடிந்து அவரை வழியனுப்பி வைத்தேன்.

அதுவரை விமான பயணச்சீட்டு முகவர் பிரதிநிதியுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. காலை ஒன்பது மணியளவில் எனக்கு தொடர்பு எடுத்தார் பயண முகவர். ஆனால் அவரிடம் குற்றஉணர்வோ பதற்றமோ சிறிதும் இருக்கவில்லை. அச்சம்பவத்தை சர்வசாதாரணமாக அவர் எடுத்துக் கொண்டார்.

"இந்த விடயம் உங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன்" என்றார் அவர். விமானப் பயணத்துக்காக முதன் முதலாக அங்கு வருவோர் அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் வர வேண்டுமென அவர் கருதுகிறாரோ தெரியவில்லை. இதே போன்று பலர் விமான நிலையத்தில் பரிதவித்த செய்தியை பின்னர்தான் நான் அறிந்து கொண்டேன்.

இவ்வாறான பொறுப்பற்ற பயண முகவர்களால் எத்தனையோ பயணிகள் இறுதி நேரத்தில் பரிதவிக்க வேண்டியுள்ளது. இந்த அனுபவத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு இந்த அனுபவம் நல்லதொரு அனுபவப் பாடமாக அமையட்டும்.

ஸ்ரீகாந்த்


Add new comment

Or log in with...