பூண்டுலோயா தனியார் பஸ் விபத்தில் ஒருவர் பலி 12 பேர் படுகாயம்

பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பூண்டுலோயா - கொத்மலை பிரதான வீதியில் மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த தனியார் பஸ் நேற்று (04) மாலை 3.30 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 14 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் படு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக, பஸ் சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 12 பேரும், கொத்மலை, கம்பளை ஆகிய வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் இதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸலாவ நவகடதொர பகுதியை சேர்ந்தவர் (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 3 பெண்கள் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம்)


Add new comment

Or log in with...