சர்வகட்சி திட்டத்துக்கு TNA பூரண ஆதரவு நல்கும்

ஜனாதிபதியுடனான சந்திப்பில் சம்மதம் தெரிவிப்பு

சர்வ கட்சி வேலைத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது பூரண ஆதரவை வழங்கும் என ஜனாதிபதியிடம் அக்கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது இணைக்கப் பாட்டைத் தெரிவித்துள்ளனர்.

80 வருடங்களுக்கு மேலாக நாட்டில் தொடரும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு காலதாமதமற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கவேண்டியது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். தமிழ்மக்களின் நலன்சார்ந்த முக்கிய விடயங்களை அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்து அதற்கு தீர்வுபெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.

அதனை செவிமடுத்துள்ள ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிலர் தமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை தொடர்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் விடுதலை செய்வது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம், வடக்கு கிழக்கில் நிலவும் தமிழ்மக்களின் காணிப் பிரச்சினைகள், இராணுவத்தினர் வசப்படுத்திக்கொண்டுள்ள காணிகளை மீளப்பெற்றுக்ெகாள்ளுதல், காணாமற் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பில் இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...