வவுனியா- ஆச்சிபுரம் இளைஞர் படுகொலை சம்பவம்: 7 பேர் கைது

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரஞ்சா என அழைக்கப்படும் ஜோன்சன் என்ற 30வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த நபரின் கை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு பிறிதொரு இடத்தில் வீசப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி சிதம்பரபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 4 வாள்கள், இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரில் ஒருவர் காயம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஏனைய 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...