பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவென இந்திய, தாய்லாந்து இராணுவத்தினர் பேச்சு

இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கின் வடக்கில் 70 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அயுத்தாயா பாரம்பரிய நகரில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் சர்வதேச ஒத்துழைப்புக்கான மேஜர் ஜெனரல் அனில் கே காஷித் தலைமையில் இந்திய இராணுவ தூதுக்குழுவினரும் தாய்லாந்து இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தோங்சாய் ரோடியோய் தலைமையில் தாய்லாந்தின் சிரேஷ்ட இராணுவ உயரதிகாரிகளும்  இப்பேச்சுவார்தையில் பங்குபற்றியுள்ளனர். 

தொழில்வாண்மை அடிப்படையில் சினேகபூர்வமான முறையில் இடம்பெற்றுள்ள இப்பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டு இராணுவத்தினரும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபடுதல், பயிற்சிகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வரைபடமொன்றை தயாரித்தல் உள்ளிட்ட பலவிடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்திய இராணுவத் தூதுக்குழுவினர், பேங்கொக் கட்டளை மற்றும் உத்தியோகத்தர்கள் கல்லூரி, பீரங்கி நிலையம் மற்றும் லோப்புரியில் உள்ள பீரங்கிப் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது தாய்லாந்துக்கான இந்தியத் தூதுவர் சுசித்ரா துரையை சந்தித்த இந்திய இராணுவ தூதுக்குழுவினர், இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகக்  குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...