வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் திகில் சம்பவம்; ‘ரஞ்சா’ என்றழைக்கப்படும் இளைஞன் கொடூரக் கொலை

சூடு நடத்தி கையை வெட்டி எடுத்துச் சென்றனர்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் இவரது கையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.     நேற்று முன்தினம் (31) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கட்டுத்துவக்கினால் அவர் மீது சுடப்பட்டுள்ளதாகவும் அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இளம் குடும்பஸ்தரது உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்படுவதுடன், ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இப் பகுதியில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என அழைக்கப்பட்டஜோன்சன் என்ற 30வயதுடைய இளம் குடும்பஸ்தரே கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்  


Add new comment

Or log in with...