சர்வகட்சி அரசு அமைப்பதற்கு முன்னர் சர்வகட்சி மாநாடொன்றை கூட்டுமாறு விமல் கோரிக்கை

ஜனாதிபதிக்கு தே.சு.மு பதில் கடிதம் 

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   சர்வ கட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுத்து எம்.பிக்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தீர்கள். ஆனால் அற்கு முன்னர் சர்வ கட்சி மாநாடொன்றை கூட்ட வேண்டும். தொலைநோக்கு, மூலோபாய அணுகுமுறை மற்றும் அதற்கேற்ப வேலைத்திட்டம் என்பவற்றை முன்வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சி மாநாடு முக்கியமானது. பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நம்பகமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற அரசியலமைப்பு திருத்தத்தினூடாக அரசில் மறுசீரமைப்பு அவசியமானது. அந்த நிபந்தனையை நிறைவேற்றாமல் அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்ற முயற்சிப்பது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

முதலில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் பொதுவான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் அவசியமாகும்.

அதன்படி, அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி, நெருக்கடியைத் தீர்ப்பதற்கான குறைந்தபட்ச பொதுத் திட்டத்தையும், அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் முன்வைக்க வேண்டும். அனைத்துக் கட்சி மாநாடு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதற்கும் வாய்ப்பளிக்கும். நாட்டுக்கு முன்வைக்கப்பட்ட பின்னர் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான ஒரு பொறிமுறையாக அனைத்துக் கட்சி அரசாங்கம் தேவையானதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (பா) 


Add new comment

Or log in with...