தகவல்களை பறைசாற்றும் முரசாக மாறி விட்ட Facebook

காலையில் எழுந்து கமராக் கண்களை விரிக்கின்றோம். முகநூல், புலனம் ஆகிய கட்டடங்கள் அழைக்கின்றன. அவற்றிலே (Facebook) முகநூலைத் திறந்தால் மரணஅறிவித்தல், பிறந்தநாள் விழா, திருமண விழா, புத்தக வெளியீடு, பொருட்களின் விற்பனை, உலகச் செய்திகள், இலக்கிய, கலைநிகழ்வுகள், அரசியல் ஆய்வுகள், உறவினர்களின் சந்திப்பு உரையாடல்கள் என தொடர்ந்து 'றீல்' போல் விழுந்து கொண்டே இருக்கும்.

வாழ்த்துகள், ஆழ்ந்த அனுதாபங்கள் மாறி மாறி தட்டச்சில் கைகள் சுழலுகின்றன. ஒரு தளம் பல விளம்பரங்களுக்குரிய காட்சியகமாக இருக்கின்றது. கதவைத் திறந்து முன்பகுதியில் இருக்கும் பிறந்தநாள் விழா அறை. அதற்குள் பலரும் பயணம் செய்த காட்சியைக் காணலாம். இவ்வாறு ஒவ்வொரு அறையாகப் காட்சியகத்தைப் பார்த்து முடித்து வெளிவர பல மணித்தியாலங்களைக் கடந்து விடுவோம்.

2003 ஆம் ஆண்டு Mark Zuckerberg பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்களுக்காக உருவாக்கிய Facemash.com என்னும் இணையத்தளம் பின்னர் 2004 இல் Facebook ஆக உருவெடுத்தது. பல நாடுகள் முகநூலைத் தடை செய்துள்ளன. பல இடங்களில் வேலைநேரங்களில் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் 2022 தை மாதக் கணக்கீட்டின்படி மாதாந்தம் முகநூலைப் பயன்படுத்துபவர்கள் 2.912 பில்லியன் பேர் என்று கணக்கீடு காட்டுகின்றது. நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் 1.929 பில்லியன் பேர்.

உலக மக்கள்தொகையானது 2050 ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் இந்த முகநூலுக்குள் புதைந்துள்ளவர்களுடைய தொகை எவ்வாறு உயரும் என்று அறியக் கூடியதாக இருக்கின்றது. காலம் கொண்டு வந்து தந்த ஒரு காட்சியகமமே முகநூல் என்பது உண்மை.

முற்காலத்தில் ஒரு விழா என்றால், அறிவித்தல்கள் கடதாசியில் பிரசுரிப்பார்கள். அயலவர்களுக்குக் கொண்டு சென்று கொடுப்பார்கள். இலலையென்றால், பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். சங்ககாலத்திலே ஒரு இடத்தில் விழா நடைபெறப் போகின்றது என்றால், ஒவ்வொரு தெருவாகக் சென்று விழாச் செய்தியினை உரைக்கின்ற வழக்கம் இருந்தது. அரசனுடைய பிறந்தநாள், படையெழுச்சி நாள், மணநாள் போன்ற நிகழ்வுகளை முரசறைந்து அறிவிப்பார்கள். உதாரணமாக அரசனுக்கு பிறந்தநாள் என்றால், அந்தச்செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் போது முரசறைந்து அறிவிக்கும் வழக்கம் இருந்தது. இதனை

'திருநாள் படைநாள் கடிநாள் என்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்'

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு விழாவுக்கும் ஒவ்வொரு வகையான முரசு பயன்படுத்தப்பட்டது. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டன. முரசினை வைப்பதற்கு என்று ஒரு தனிக் கட்டிலும் உருவாக்கப்பட்டு அதன் மீது வைக்கப்பட்டது. இச்செய்தியினை பதிற்றுப்பற்று எடுத்துக் காட்டுகின்றது.

'செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்து இயவர்''

விழாச் செய்திகளைச் சொல்வதற்காக மணமுரசு பயன்படுத்தப்பட்ட செய்தியை மணிமேகலை எடுத்துக்காட்டுகின்றது.

வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்

என்று மணிமேகலை கூறுகிறது. பழைமை உடைய குடியில் பிறந்தவன் வென்ற காளையின் தோலினால் போர்த்தி இடி போன்ற முழக்கத்தைச் செய்கின்ற முரசைக் கச்சையானையின் கழுத்தின் மேலே ஏற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியை ஊர் மக்களுக்கு அறிவித்தான் என்று திருவிழாச் செய்தியை ஊரவர்க்கு அறிவித்த போது முரசு அறைந்த செய்தியை மணிமேகலை எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாறு முரசு செய்கின்ற மரம், அது செய்கின்ற முறைமைகள், அதற்குக் கிடைக்கின்ற மரியாதை, பல்வேறுவிதமான முரசுகள், அவை பற்றிய விளக்கம் என்பன அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, மணிமேகலை, பெருங்கதை போன்ற பாடல்களில் அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த முரசு இன்று ஒரு பக்கப்பார்வையில் முகநூலுக்குள் அடங்கி விட்டதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இதேபோல் 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சைப்பெரிய கோயிலை எடுத்துப் பார்த்தால் அது கட்டப்பட்ட காலப்பகுதியில் வேதம் ஓதுவார் இல்லங்கள், வியாபார ஸ்தாபனங்கள், தேவதாசிகளின் இல்லங்கள், நடன ஆலயங்கள், இசைக்கல்லூரிகள், திண்ணைக் பள்ளிக்கூடங்கள் போன்றன கோயிலுக்குரியதாக கட்டப்பட்டிருந்தன எனக் கற்றிருக்கின்றோம்.

உலகம் ஒரு சிறு கிராமமாக ஒடுங்கி விட்டது. நாம் உலகத்தைக் கைகளுக்குள் கொண்டு வந்து காட்சிப் பொருளாக்கி விட்டோம். சினிமாக் கொட்டகைகள், வியாபார ஸ்தாபனங்கள், விழாக்கள், ஆலய வழிபாடு இவைபோன்ற எதுவுமே தேவையில்லை. அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்து கண்டு களிக்கின்றோம்.

கௌசி சிவபாலன்
ஜேர்மனி


Add new comment

Or log in with...