கிழக்கில் வேகமாக பரவும் டெங்கு நோய்; மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் மழைக்காலநிலையைத் தொடர்ந்து மீண்டும், டெங்குநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதாரத் துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

கொடிய டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் அலட்சியம் காட்டாது, அவதானமாகத் தொழிற்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பொதுமக்களுக்கு தனித்தனியாக விஷேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது ஒலிபெருக்கி அறிவித்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் போது, டெங்கு பரவாது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் தெளிவாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் பரவும் டெங்கு தொடர்பில் பொதுமக்கள் எப்பொழுதும் அவதானம், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், சுகாதாரத்துறையினரின் நடவடிக்கைகளுக்கு நிறைவான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், விழிப்புடன் தொழிற்பட்டு முன்கூட்டியே பாதுகாப்புப் பெற வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் மேலும் வலியுறுத்துகின்றனர்;.

கொடிய டெங்குநோய் தொடர்பில் தற்பொழுது கிழக்கு மக்கள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்களது குடியிருப்பு வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தம், சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இதன் போது வலியுறுத்தப்படுகின்றது.

வீட்டில் பயன்படுத்திய சிரட்டை, யோகட் கப், பழைய ரயர், குரும்பை மற்றும் பூச்சாடி, வீட்டுக் கூரை பீலி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட நீர்தேங்கும் பொருட்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். குடிநீர்க் கிணறுகளை குப்பை, கூளங்கள் உட்செல்லாதவாறு மூடிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாரத்தில் 30 நிமிடங்களை டெங்கு துப்புரவுக்காக ஒதுக்கி, பணிகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர். டெங்கு தொடர்பில் விடுக்கப்படும் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பை அடியோடு ஒழிப்பதற்கு பொதுமக்கள் நிறைவான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் மேலும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் வெளியூர்ப் பயணங்களின் போதும், தங்களது பாதுகாப்புத் தொடர்பில் அதிகம் கவனம் வெலுத்த வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிறைவான ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் டெங்கை ஒழிப்பது கடினமான காரியமாகும். ஆகையால், ஒரு நாள் அல்லது இரு நாட்கள் துப்புரவுப் பணிகளுடன் தங்களது பொறுப்பு நிறைவடைந்து விட்டது என எண்ணி பணிகளைக் கைவிடாது, தொடர்ந்து நமதும், சுற்றுப்புறச் சூழல் துப்புரவிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரப்படுகின்றது.

கழிவுகள், குப்பை, கூளங்களை கண்டபடி எங்கும் வீசாது, பாதுகாப்பாகச் சேகரித்து உள்ளூராட்சி சபைகளின் கழிவகற்றும் வாகனங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புப் பிரதேசங்களில் ஆங்காங்கே காணப்படும் வெற்றுக் காணிகளில் கழிவுகள், குப்பை கூளங்கள் வீசுவதை அல்லது பாதுகாப்பற்ற முறையில் கொட்டுவதிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் வீட்டு வைத்தியம் மேற்கொள்ளாது, அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் அல்லது தரமான வைத்தியரிடம் தாமதியாது சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாது இரண்டு நாட்களுக்கு நீடிக்குமானால், முறையான இரத்தப் பரிசோதனை அவசியமென வைத்தியர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாது இரண்டு நாட்களுக்கு நீடிக்குமானால், தாமதியாது இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமெனவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது

காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியரினால் சிபார்சு செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளை மாத்திரம் உட்கொள்வதுடன், வேலைத்தலங்கள், பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் வைத்திய ஆலோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகம்மட் றிஸான்

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...