குவாட் அமைப்பின் மறுமலர்ச்சிக்கு ஷின்சோ அபே முக்கிய பங்கு

குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நட்பு நாடுகளுடன் இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இவ்வமைப்பின் மறுமலர்ச்சிக்கும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே முக்கிய பங்காற்றியுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவையொட்டி இந்தியாவின் முன்னணி பொதுக்கொள்கை நிறுவனமான அனந்தா அஸ்பென் நிலையம் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், குவாட் அமைப்பு 2007 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கும் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பெரிதும் வளர்ச்சியடைந்தது.

அனந்தா அஸ்பென் நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் இரண்டு மட்டங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு  ஷின்சோ அபே முக்கிய ஆதரவாளராக செயற்பட்டார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒரு முத்தரப்பு நட்புறவை அவர் ஊக்குவித்தார். அவரது இதயத்தில் இந்தியாவுக்கு விஷேட இடமிருந்தது. நிச்சயமற்றதும் கொதிநிலையிலும் காணப்படும் உலகை எதிர்கொள்ளவென அவர் ஜப்பானைத் தயார்படுத்தினார். ஜனநாயக விழுமியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதிகளின் அடிப்படையில் ஒரு ஒழுங்கை உருவாக்க அவர் உழைத்தார்.

தாம் இந்தியாவின் ஜப்பானுக்கான இராஜதந்திரியாக ஏற்கனவே டோக்கியோவில் கடமையாற்றிய போது, ஷின்சோ அபேவுடன் வளர்த்துக்கொண்ட தனிப்பட்ட நட்புறவு குறித்தும் அமைச்சர் ஜெய்சங்கர் இங்கு நினைவுகூர்ந்தார்.

வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையையும் புவிசார் அரசியலையும் நன்றாகப் புரிந்து கொண்டிருந்த அவர், ஜப்பானின் உலகளாவிய பங்கு மாறிவருவதையும் தெளிவாக உணர்ந்திருந்தார். இந்து - பசுபிக் பிராந்தியக் கருத்தியலைக் கொண்டிருந்த ஷின்சோ அபே, தொழில்முயற்சியாளராகவும் துணிச்சல் மிக்கவராகவும் விளங்கினார்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இந்து-பசுபிக் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கெம்ப்பெல், அமெரிக்காவிலிருந்து மெய்நிகர் ஊடாக இந்நிகழ்வில்  உரையாற்றிய போது, 'நவீன ஆசியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்த அபே மாறிவரும் பாதுகாப்பு இயக்கவியலைப் புரிந்துகொண்ட ஒருவராகத் திகழ்ந்ததோடு திரும்பிப் பார்க்கப்படக்கூடியவராகவும் விளங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...