நிமல் சிறிபால டி சில்வா தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம்

ஜப்பானின் 'தாய்சே' (Taisei) நிறுவனத்திடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய மேற்கொண்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (31) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் குறித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, எஸ். எம். ஜீ. கே. பெரேரா ஆகியோரும் குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த மூவரடங்கிய விசாரணைக் குழு, கடந்த ஜூலை 22 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜூலை 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து, கடந்த ஜூலை 06ஆம் திகதி நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலகியிருந்தார் என்பதோடு இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

அதற்கான விசாரணைக்குழ  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...