குரங்கு அம்மை தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எவ்வாறு?

பாதிப்பை கூடுதலாக எதிர்கொள்வோர் யார்?

குரங்கு அம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய். ஆபிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆய்வக குரங்கிலிருந்து முதன்முதலில் இந்த வைரஸ் எடுக்கப்பட்டதால் இது ‘குரங்கு அம்மை’ என அழைக்கப்படுகிறது. குரங்கு மற்றும் பெரியம்மை வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை.

இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் இந்த வைரஸ் தற்போது தீவிர பரவல் நிலையை அடைந்து விட்டது. அதாவது ஒரு வைரஸ் அல்லது நோய் ஒரு குழுவிற்கு இடையே பலருக்கு பரவி, பலருக்கு அதன் எதிர்ப்பு சக்தி வந்து, பின்னர் காலத்துக்குக் காலம் ஏற்படும் காய்ச்சல் போல மாறி வருகின்றது. இந்தியாவின் கேரளாவில் சிலருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது.

குரங்கு அம்மை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது. குரங்கு அம்மை ஏற்பட்டவருக்கு உள்ள சொறி, சிரங்குகள் இன்னொருவருக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் குரங்கு அம்மை இருக்கும் விலங்குகளுடன் நெருக்கமாக பழகும் நபர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுவாக குரங்கு அம்மை காரணமாக ஏற்படும் சிரங்குகளில் இருந்து இந்நோய் பரவும். பாலியல் உறவு வழியாக பரவும் அபாயமும் உள்ளது.

குரங்கு அம்மையினால் பொதுவாக ஆண்கள் மற்றும் அடிப்படை நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக தன் பாலின உறவு கொண்ட ஆண்கள் இடையே இந்த வைரஸ் அதிகமாக பரவி இருக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கும் குரங்கு அம்மை ஏற்படும் அபாயம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குரங்கு அம்மை அறிகுறிகள் பெரியம்மை அறிகுறிகளைப் போலவே இருக்கும், ஆனால் இலேசானவை. மேலும் இந்த நோய் அவ்வளவு ஆபத்து கொண்டது கிடையாது. இதனால் ஏற்படும் அறிகுறிகள் பொதுவாக 14-21 நாட்களுக்குள் நீடிக்கும். குரங்கு அம்மையின் இறப்பு வீதம் பொதுமக்களில் 0 முதல் 11 சதவீதம் வரை உள்ளது. ஆனால் சிறு குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது.

பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான தலைவலி, வீக்கம் (கழுத்து, அக்குள் அல்லது இடுப்பு), முதுகுவலி, தசைவலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். நோயாளிகளிடம் ஒரு வித அரிப்பு தன்மை உண்டாகும். பெரும்பாலும் முகத்தில் தடிப்புகள் தோன்றும், பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இந்த தடிப்புகள் பரவும். தடிப்புகள் நுளம்பு கடித்தது போன்ற சிவப்பு புள்ளிகளாகத் தொடங்கும். படிப்படியாக சீழ் நிறைந்த, பெரிய புடைப்புகளாக மாறி, பின்னர் சிரங்குகளாக மாறும்.

முக்கியமாக கைகள், பாதங்கள், தொடை பகுதிகளில் தடிப்புகள் ஏற்படும். இது சீழ் வைத்து பின்னர் சீழ் வெடித்து காய்ந்த புண்களாக மாறும். குரங்கு அம்மை ஏற்படுவதை தடுக்க முக்கியமான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்த்தல், பாதுகாப்பான உடலுறவு, உணவுப் பொருட்களை பகிராமல் இருப்பது, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், முக்கியமாக அறிகுறி உள்ளவர்களை சந்தித்த பின் உங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...