சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வாசகர் உள்ளத்தில் என்றும் வாழும்

கொட்டகலையில் ஞாயிறன்று நூல் வெளியீடு

மலையகத்தில் அறுபதுகளில் கிளர்ந்த கல்வி எழுச்சியின், சமூக விழிப்புணர்வின், இளைஞர் சிந்தனையின் மைய நாயகனாகத் திகழ்ந்த இர.சிவலிங்கத்தின் பண்ணையில் வார்க்கப்பட்ட சாரல்நாடன், மலையக இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தினை வகிக்கிறார். ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் இர.சிவலிங்கம் பணியாற்றிய காலத்தில், அவரின் கீழ் மாணவனாகப் பயின்ற சாரல்நாடன், சிவலிங்கம் அவர்கள் சாரல்நாடன் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையை மெய்ப்பித்துக் காட்டியிருந்தார்.

கவிதையில் ஆரம்பித்து சிறுகதை, குறுநாவல், நாவல், வாழ்க்கை வரலாறு, இலக்கிய வரலாறு என்று இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் தன் எழுத்தாற்றலை நிரூபித்தவர் சாரல்நாடன். மலையக இலக்கியத்தில் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தானே சாரல் வெளியீட்டகத்தை நிறுவி, மலையகப் படைப்புகளுக்கு நூல் வடிவம் தந்தார். சி.வி.வேலுப்பிள்ளையின் 'வாழ் வற்ற வாழ்வு' என்ற நாவலைத் தேடிக் கண்டுபிடித்து அதனை நூலாக வெளியிட்டார்.

போப் துரை கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்று தியாகிகளாக மறைந்த வீராசாமி, வேலாயுதம் ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டத்தின் பின்னணியில் சாரல்நாடன் எழுதிய 'வானம் சிவந்த நாட்கள்' என்று வீரகேசரியில் தொடராக எழுதிய நாவலை, நூலாக்கும் முயற்சியில் அனைத்து வேலைகளையும் முடித்த நிலையில், துரதிர்ஷ்டமாக 31.-08.-2014 இல் அவர் மரணித்தது அந்நூல் வெளியீட்டை சாத்தியமற்றதாக்கி விட்டது. அவர் மறைந்து எட்டு ஆண்டுகள் கழிந்து, இன்று அந்நூலை வெளியிட்டு வைப்பதில் நாங்கள் பெரும் மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைகின்றோம். இது சாரல்நாடனின் ஆத்மநிறைவுக்கு நாங்கள் வழங்கும் சிறு படையலாகும்.

இந்நாவலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு லண்டனில் வாழும் இலக்கிய விமர்சகரும் மலையக இலக்கிய ஆய்வாளருமான மு.நித்தியானந்தன் அவர்களைக் கேட்டபோது, தனக்கேயுரிய ஆய்வு முத்திரையுடன் அவர் வழங்கியுள்ள முன்னுரைக்காக நாங்கள் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

மலையக இலக்கிய முயற்சிகளில் எங்களின் செயற்பாடுகளுக்கு என்றும் உற்சாகமும் ஆதரவும் தரும் அவரின் உயர்ந்த மனதிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நூல் வடிவமைப்பில் தமிழ்ப் புத்தக உலகில் தலைசிறந்த வடிவமைப்பு ஓவியராகத் திகழும் கே.கே.ராஜா இந்த நூலுக்கு அட்டைப்பட ஓவியத்தை வடித்துத் தந்திருப்பது நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. தெளிவத்தை ஜோசப்பின் 'நாமிருக்கும் நாடே', என்.எஸ்.எம்.ராமையா வின் 'ஒரு கூடைக்கொழுந்து', சி.வி.வேலுப்பிள்ளையின் 'வீடற்றவன்' ஆகிய நூல்களுக்கு அட்டைப்படம் வரைந்த பெருமைமிகு ராஜாவின் ஓவியத் தூரிகையில் இந்த நூலின் அட்டைப்படம் உருப்பெறுவது நமது பாக்கியமாகும். தனது வேலைப்பளுவிற்குள் இந்நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தன் அரிய நேரத்தை ஒதுக்கி உதவியதற்கு எங்கள் நன்றி என்றும் உரியது.

சிரமம் பாராமல் இந்நூலினை மொய்ப்புப் பார்த்து உதவிய இ.பத்மநாப ஐயருக்கும் நாங்கள் நன்றிக்குரியவர்கள். எனது சமூக, இலக்கிய, கலை வெளியீட்டு பணிகளுக்கு என்றும் ஆலோசனைகளை வழங்கி எம்மை உற்சாகப்படுத்தி வந்தவர் காலஞ்சென்ற பேராசியர் சோ.சந்திரசேகரம் ஆவார்.

கொழும்பிலிருந்து சென்னை மாணிக்கவாசகர் பதிப்பகம் இராம.குருமூர்த்தி அவர்களுடன் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இந்த புத்தக வெளியீட்டை நிறைவு செய்திருக்கின்றோம். அவருக்கும் நாங்கள் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை பகிர்வதோடு இந்த நூல் வெளிவர பலவகைகளிலும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய திருமதி புஷ்பா சாரல்நாடன், மகள் ஜீவகுமாரி, மகன் ஸ்ரீகுமார் ஆகிய மூவரும் ஆக்கங்களை தந்துதவியமைக்காக நன்றிகூற கடமைபட்டுள்ளோம்.

காலஞ்சென்ற பி.சந்திரசேகரம் நினைவாகவும், பத்திரிகைத் துறையில் மலையகத்திற்கு சேவையாற்றிய எஸ்.எம்.கார்மேகம் நினைவாகவும், மலையகத்தின் எழுச்சிக் கவிஞர் பெரியசாமி அவர்களை நினவுகூர்ந்தும் நாங்கள் வெளியிட்ட நூல்கள் மலையக மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நல்லுணர்வோடு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் சிரமத்தை உணர்ந்து, நமது உழைப்பையும் முயற்சியையும் மதித்துப் போற்றும் நல்லுள்ளங்களுக்கு நாம் நன்றி நவில்கின்றோம். சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' என்ற இந்நாவல் தமிழ்கூறும் நல்லுலகில் வரவேற்பைப்பெரும் என்று நம்புகிறோம்.

இதேவேளை அமரர் சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' நாவல் வெளியீடும்

8 ஆவது ஆண்டு நினைவேந்தலும் எதிர்வரும் 31.07.2022 அன்று மு.ப. 10 மணிக்கு கொட்டகலை தமிழ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலியைத் தொடர்ந்து வரவேற்பரையை மு.நேசமணி நிகழ்த்துவார்.

கவிதாஞ்சலியை தினேஸ் நிகழ்த்துவார். தலைமையுரையை சு.முரளிதரன் ஆற்றுவார். அதனையடுத்து நூல் வெளியீடும் சிறப்புப் பிரதிகள் வழங்குதலும் நடைபெறும்.

வெளியீட்டாளர் உரையை (காணொளி வழி) எழுத்தாளர் எச்.எச். விக்ரமசிங்க நிகழ்த்துவார். நாவல் குறித்த பார்வையை சு. தவச்செல்வன் நிகழ்த்துவார்.

நினைவேந்தல் அரங்கத்தின் தலைப்பு: 'சாரல்நாடன் எனும் மலையக சகாப்தம்'

கருத்துரைகள்: சாகித்யரத்னா மு.சிவலிங்கம், கலாபூசணம் மொழிவரதன்,சிவ இராஜேந்திரன்,சிவலிங்கம் சிவகுமார், ஜெ.சற்குருநாதன், வடிவேல் இர.சிவலிங்கம், சிவனு மனோகரன், அகிலன் டேவிட், சுதர்ம மகாராஜன், நன்றியுரை: ஜீவகுமாரி.

எச்.எச். விக்ரமசிங்க...

[email protected]


Add new comment

Or log in with...