கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகளில் 4 பேர் மரணம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் 'பஸ் பொட்டா' மரணம்
கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ‘பஸ் பொட்டா’ என அழைக்கப்படும், திட்டமிட்ட குற்றச் செயல்களை புரியும் 42 வயதான சந்தேகநபரான சமன் ரோஹித பெரேரா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை - கலகொடவில் 44, 49 வயதான இருவர் மரணம்
இதேவேளை, நேற்றிரவு (27) அம்பலாங்கொடை - கலகொட பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு  நிகழ்வின் போது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த அடையாளம் தெரியாத ஒருவரினால் ரி56 வகை துப்பாக்கியால் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த மற்றொருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 49 மற்றும் 44 வயதான கலகொடை - குலீகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (26) அம்பலாங்கொடை, ஊரவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் இச்சம்பவத்திற்கு தொடர்பிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இரத்மலானை சில்வா மாவத்தையில் முச்சக்கர வண்டி சாரதி மரணம்
நேற்று (27) இரவு வேளையில் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை, சில்வா மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது, ரி56 வகை துப்பாக்கியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதான, இரு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...