- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழக்கிலிருந்து விடுவிப்பு
- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அழைப்பாணை
முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை ஓகஸ்ட் 02ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இருவரும் உள்ளடங்குவதால் உயர் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று (27) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள, ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்கவிடம் மனுதாரர்கள் நிவாரணம் கோரவில்லையென்பதால், அவரை விடுதலை செய்யுமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை கருத்திலெடுத்த நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
இதேவேளை, நாட்டையும் நாட்டு மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியமை தொடர்பான மனு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி விளக்கமளிக்குமாறு, உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
Add new comment