முச்சக்கர வண்டிகள்: பொலிஸில் பதிந்து எரிபொருள் நிலையத்தை அறிவிக்கவும்

- ஓகஸ்ட் 01 முதல் குறித்த நிலையத்தில் எரிபொருள் விநியோகம்
- மின்பிறப்பாக்கிகள், விவசாய உபகரண பதிவு பி. செயலகத்தில்
- 49CC மோ. சைக்கிள்கள் வாகன திணைக்கள பதிவு அவசியம்
- செஸி இலக்கம் மூலம் பதிய முடியாவிடின் வெள்ளிக்கிழமை மாற்று வழி
- இதுவரை 40 இலட்சம் பேர் NFP QR பதிவு

தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி நடைமுறைக்கு வருவதாகல், முச்சக்கர வண்டிகளை ஜூலை 31 இற்கு முன், அந்தநத்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து, உரிய எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை பரிந்துரைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 01 முதல் அவர்கள் பரிந்துரைத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

 

 

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தோட்டக் கருவிகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்துவோர் தமது வாராந்த எரிபொருள் தேவையுடன் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதோடு, எரிபொருளை பெறுவதற்கான ஒரு எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, NFP QR பதிவுக்காக செஸி (Chassis) இலக்கம் மூலம் பதிவு செய்ய முடியாத வாகனங்களை, வெள்ளிக்கிழமை (29) முதல் வருமான அனுமதிப்பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், 49CC மோட்டார் சைக்கிள்களை கொண்டுள்ளவர்கள் தங்களது வாகனத்தை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து, வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்று அதன் பின்னர் NFP QR இற்கான பதிவை மேற்கொள்ள, வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

அந்த வகையில், இதுவரை 40 இலட்சம் (4 மில்லியன்) பேர் தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக, கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்று (26) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) அடிப்படையிலான எரிபொருள் விநியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், 2022 ஓகஸ்ட் 01ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR வசதியில் மாத்திரம் எரிபொருள் விநியோகத்தை இறுக்கமாக செயற்படுத்துமாறு அனைத்து CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் QR ஒதுக்கீடு அடிப்படையிலான முறை அமுல்படுத்தப்படுவதோடு வாகன இறுதி இலக்க முறைகள் உள்ளிட் ஏனைய அனைத்து முறைகளும் செல்லுபடியற்றதாக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...