ஸ்டாலின், வசந்த உட்பட அறுவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு

கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் உத்தரவு

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனரென குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொழும்பு  கோட்டை நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் திலின கமகே நேற்றைய தினம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த நிலையில் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்துக்கான தடையை விதிக்குமாறும்

கொழும்பு கோட்டை பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோளை கருத்திற்கொண்டுள்ள மஜிஸ்திரேட் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி வசந்த முதலிகே, லஹிரு வீரசேக்கர, ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், எரங்க குணதிலக்க மற்றும் ஜீவந்த பீரிஸ் அடிகளார் ஆகியோருக்கு எதிராகவே நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளது.

அதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சமூக செயற்பாட்டாளர் ரவிந்து சேனாரத்ன மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேரர், நடிகர் ஜகத் மனுவர்ன, ஜோஹான் அப்புஹாமி உள்ளிட்ட 09 பேரை கொழும்பு கோட்டை பொலிஸார் கைது செய்து பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...