இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் மீண்டும் தீவிரமடையும் கொவிட் தொற்று!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், நேற்று சுமார் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பெப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்த்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று சுமார் மீண்டும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடி 38 இலட்சத்து 47 ஆயிரத்து 065 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் நேற்றுக் காலை வரையான 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொவிட் காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 25 ஆயிரத்து 930 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 30 இற்குள் என்ற அளவிலேயே இருந்த நிலையில், தற்போது பல நாட்கள் இடைவேளைக்குப் பிறகு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 21 ஆயிரத்து 219 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் தற்போது 1 இலட்சத்து 49 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெறுவோர் வீதம் 0.34% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 201 கோடி 31 லட்சத்து 53 ஆயிரத்து 839 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 101 கோடி 98 இலட்சத்து 38 ஆயிரத்து 573 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 92 கோடியே 83 இலட்சத்து 79 ஆயிரத்து 258 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 கோடி 49 இலட்சத்து 36 ஆயிரத்து 008 டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.


Add new comment

Or log in with...