நீர்வெறுப்பு நோயற்ற நாடாக இலங்கையை மாற்றும் திட்டம்

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டொக்டர் எல்.டி.கித்சிறி இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் 5 இலட்சம் நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், 30 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் 20 முதல் 30 மில்லியன் நாய்கள் உள்ளதாகவும், இருப்பினும் ஆண்டுக்கு 11 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 வீதமான நாய்க் குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதன் மூலம் குறித்த நோய் பரவுவதை குறைக்க முடியும். நீர்வெறுப்பு நோயினால் வருடாந்தம் 20 தொடக்கம் 30 வரையான மரணங்கள் ஏற்படுவதுடன், அனைத்து நாய்களுக்கும் விசர்நாய்க்கடி தடுப்பூசி போடுவது அவசியமென்று அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசர்நாய்க்கடிக்கு எதிராக நாய்களுக்கு தடுப்பூசி போடாததும், நாய் கடித்த பின்னர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததும் இலங்கையில் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாகும்.

மிருகம் கடித்த உடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் 100 வீதம் குறித்த நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியும். விசர் நாய்க்கடிக்கான (நீர்வெறுப்பு நோய்) தடுப்பூசிகளை அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு நீர்வெறுப்பு மூலம் 377 இறப்புக்கள் ஏற்பட்டதாகவும், 1975 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விசர்நாய்க்கடி தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2014 ஆம் ஆண்டு அது 19 ஆக குறைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை நீர்வெறுப்பு நோய் அற்ற நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பயனுள்ள பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், குறிப்பாக செல்லப்பிராணிகளை வைத்திருந்தவர்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டொக்டர் எல்.டி.கித்சிறி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

மதார் தம்பி ஆரிப்

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...