புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நடைமுறை தொடர்பில் ஒரு சில ஊடகங்களில் பிழையான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக சபாநாயகரின் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் நிறைவடையும் முன் அப்பதவி பெற்றிடமாகும் நிலையில், அதற்காக தேர்தலை நடாத்த, அரசியலமைப்பின் 40ஆவது பிரிவு மற்றும் ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான 1981 ஆம் ஆண்டு 2 இலக்க விசேட ஏற்பாடுகள் சட்டம் ஆகியன குறிப்பிட்டுக் கூறியுள்ளன.
ஜூலை 14 ஆம் திகதி பிற்பகலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றது. குறித்த கடிதத்தின் சட்டபூர்வ தன்மை தொடரில் ஆராயப்பட்டு அதனைத் தொடர்ந்து ஜூலை 15ஆம் தேதி உத்தியோபூர்வமான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டிருந்தார்.
அதற்கமைய 1981 ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4ஆம் பிரிவிற்கு அமைய, ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். அதற்கமைய நேற்றைய தினம் (16) பாராளுமன்றம் கூட்டப்பட்டு அது அறிவிக்கப்பட்டது. அதனுடன் இணைந்தவாறு, குறித்த விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 5ஆம் பிரிவிற்கு அமைய 48 மணித்தியாலங்களுக்கு முற்படாத வகையிலும் 7 நாட்களுக்கு மேற்படாத வகையிலும் அதற்கான வேட்பு மனு கோரல் கோரப்பட வேண்டும். அதற்கமைய குறித்த தினமாக ஜூலை 19ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதன் 6.4 பிரிவிற்கு அமைய, அத்தினத்தில் குறித்த வேட்பு மனு கிடைக்கப்பெற்றதை அடுத்து, 48 மணித்தியாலங்களுக்கு மேற்படாத வகையில் அதற்கான தேர்தலை நடத்துவதற்கான தினம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்கான தினமாக ஜூலை 20ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி செயற்பாடுகள், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கப்பட்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒரு சில ஊடகங்கள் சரியான தகவல்கள் மற்றும் சட்ட ரீதியான பின்புலங்கள், அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் ஆராயாமல், பொதுமக்களிடையே சந்தேகத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. நாட்டில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் உணர்வுகளை குழப்பும் வகையில் செயற்படாமல் குறித்த நடைமுறைகள் தொடர்பில் பொறுப்புடன் அறிக்கைகளையும் பின்னூட்டல்களையும் வழங்குமாறு அனைத்து ஊடகங்களிடமும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவசியமான விளக்கங்கள், நடைமுறைகள், செயற்பாடுகள் அல்லது ஏனைய பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் உரிய விளக்கத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவலகம் தயாராக உள்ளது. அனைத்து பொதுமக்களும் நிறுவனங்களும் நாட்டின் அரசியலமைப்பை உறுதியாக பேணும் வகையில், நாட்டில் இயல்பு நிலை மற்றும் வழக்கமான செயற்பாடுகளை முறையாக பேண உதவுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
Add new comment