மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் நாட்டை விட்டுச் சென்ற கோட்டாபய

- அதிகாரங்கள், சட்டங்களுக்கு உட்பட்டு விமானம் வழங்கப்பட்டது: விமானப்படை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் இன்று (13) அதிகாலை நாட்டை விட்டுச் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக  விமானப்படை விமானமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப்படை இது தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் முழு அனுமதியின் கீழ், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடிவரவு - குடியகல்வு, சுங்கம் உள்ளிட்ட ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ மற்றும் இரு பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு செல்ல, இன்று (13) அதிகாலை விமானப்படையினால் விமானமொன்று வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்றையதினம் (13) பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


Add new comment

Or log in with...