நாட்டை விட்டு வெளியேற பசில் முயற்சி?; குடிவரவு திணைக்கள அதிகாரிகள் பகிஷ்கரிப்பு

- பொதுஜன பெரமுன தலைவர்கள் எவரும் நாட்டை விட்டு செல்லவில்லை

பட்டுப்பாதை (Silk Route/CIP) பயணிகள் அனுமதி சரிபார்த்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகும் தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் படி, இன்று நள்ளிரவு 12.00 மணி முதல், மறு அறிவித்தல் வரை பட்டுப்பாதையில் பயணிகள் அனுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக நேற்று (11) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க பிரஜையான அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் பட்டுப்பாதை புறப்படும் முனையத்தை வந்தடைந்ததை அடுத்து, இதன்போது பட்டுப்பாதை வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அங்கிருந்த பயணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளும் தங்களது பணிகளை மேற்கொள்ள மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து அவருக்கு திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பசில் ராஜபக்‌ஷவின் விமானப் பயணச்சீட்டு எனத் தெரிவிக்கப்படும் ஆவணம்

இதேவேளை, தமது கட்சியின் எந்தவொரு தலைவரும் நாட்டை விட்டுச் செல்லவில்லையென பொது ஜன பெரமுன கட்சி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...