இந்திய ட்ரோன் விமான பரிசோதனை வெற்றி என அறிவிப்பு

எதிரி இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடிய ட்ரோன்களை இந்திய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் திட்டத்தில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் 15 நிமிடங்களுக்கு பறக்கவிடப்பட்டது. இப் பரிசோதனை திருப்தி அளிப்பதாக உள்ளது என்று பரிசோதனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளின் பாதுகாப்பு படைகள் தற்போது ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆளற்ற தாக்குதல் கருவியாக பயன்படுத்தி வருகின்றன. இந்திய இராணுவத்தில் ஏராளமான இஸ்ரேலில் தயாரிப்பான தாக்குதல் ட்ரோன்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் குரூஸ் ஏவுகணைகளைப் போல எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ட்ரோன்கள் உள்ளன. இதே சமயம் மூன்று பில்லியன் டொலர் செலவில் 30 தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யும் திட்டத்தை இந்தியா தற்போது நிறுத்தி வைத்து உள்ளுரில் இராணுவ ட்ரோன்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை முடுக்கி விட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளுர் தயாரிப்பான ட்ரோனின் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றிருப்பதை, இந்தியாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்துறை அபிவிருத்தியில் ஒரு மைல் கல்லாக வர்ணித்திருக்கும் இத்துறைசார் விஞ்ஞானி, மிக முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இது எடுத்துக்காட்டியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த ட்ரோன் மேலும் பலகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கமிட்டியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...