க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வாழ்க்கைத்திறன் வழிகாட்டல் எனும் தலைப்பில் நடைபெற்ற இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாலமுனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பாலமுனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அனுசரணையில் பாலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி நெறியில், பாலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலை மற்றும் பாலமுனை ஹிக்மா வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை மதித்தல், உயர்கல்வி வழிகாட்டல் தொழிநுட்பத்துறை, கலைத்துறை மற்றும் வணிகத்துறையும் தனது சுயகற்றல் அனுபவமும், தலைமைத்துவம், பெற்றோரை மதித்தல், பதின்ம பருவத்தை விளங்கிக் கொள்ளலும் கையாளுதலும், சாதாரணதரப் பரீட்சையின் பின்னரான அடுத்தகட்ட நடவடிக்கை, மருத்துவத்துறையும் தனது சுயகற்றல் அனுபவமும், ஒரு முஸ்லிமின் வாழ்வில் தொழுகை, இளமைப் பருவம் பற்றிய இஸ்லாமிய நோக்கு, இலக்கமைத்தல், போன்ற பல்வேறு தலைப்புக்களில் இந்த இரண்டு நாள் பயிற்சி இடம்பெற்றது.
தற்போது கூடுதலாக சட்டவிரோத மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை நோக்கும் போது பாடசாலை செல்கின்றவர்கள் இளவயதினர் போன்றோரை அடையாளம் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த செயற்பாட்டிலிருந்து எதிர்கால மாணவர் சமூகத்தை பாதுகாத்து விழிப்பூட்டும் வகையிலும், எமது நாட்டில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை இல்லாதொழித்து சிறந்ததொரு நாட்டையும் சமூகத்தையும் கட்யெழுப்பி சிறந்த கல்வியலாளர்கள் சமூகவாதிகளை உருவாக்க வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையிலும் இப்பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதவான் அல் ஹாபிழ் என்.எம்.அப்துல்லா பிரதம அதிதியாகவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றகுமத்துள்ளா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பாலமுனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் யு.எல்.லத்தீப், அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.ஹாசிம் (மதனி), தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி யு.எல்.ஏ.மஜீத், ஏ.எல்.ஐயுப், உளவளத்துனையாளர் எஸ்.ஆப்தீன் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், உலமாக்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதி நாள் நிகழ்வில் மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டின் கீழ் பாலமுனை வரலாற்றில் முதன் முதலாக மகப்பேற்று வைத்திய நிபுணராக தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர் ஏ.எல்.சுதைஸை பாராட்டி பாலமுனை ஜீம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிருவாகமும் மின்ஹாஜ் தேசிய பாடசாலை அதிபர் தலைமையிலான நிருவாகமும் நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.ஸிறாஜ்...
(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)
Add new comment