திருகோணமலையில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட தீர்மானம்

- அடுத்த போகத்திற்கு வயலுக்கு அவசியமான நைதரசன் கிடைக்கும்

கிழக்கு மாகாண ஆளுநர்  அநுராதா யஹம்பத்தின் ஆலோசனைக்கமைய, கோமரங்கடவல மற்றும் மொறவெவ பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் இடைப் போகமாக அதனை மேற்கொள்ள இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

'வெவ் கம் புபுதுவ' (குளக் கிராமங்கள் மலர்ச்சி) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிடும் விசேட கூட்டம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, இதற்கு அவசியமான பயறு விதைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டது.

இடைப் போகமாக பயறு செய்கையை மேற்கொள்ளும் போது, அதன் மூலம் அடுத்த போகத்தில் நெல் வயலுக்கு தேவையான நைதரசன் கிடைப்பது இதன்  விசேட அம்சமாகும்.

இக்கலந்துரையாடலில், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி எம். ஹுசைன், கோமரங்கடவெல மற்றும் மொறவெவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உரிய திட்ட பணிப்பாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...