கல்லடி ராமகிருஷ்ணமிஷனில் யாழ். கதிர்காமம் பாதயாத்திரை குழுவினருக்கு பெருவரவேற்பு

வரலாற்றில் முதல் தடவையாக யாழ். கதிர்காமம் பாதயாத்திரை குழுவினருக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் குருகுலத்தில் நேற்றுமுன்தினம் (05) செவ்வாய்க்கிழமை பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ். செல்வச்சன்னதி ஆலயத்திலிருந்து கடந்த (04) சிங்கராஜா ஜெயராஜா தலைமையில் ஆரம்பமான இப்பாதயாத்திரை, யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஒருமாத காலத்தை பூர்த்தி செய்கின்றது.

இக்குழுவினர் நேற்று முன்தினம் (05)காலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில், மட்டக்களப்பு காரைதீவு ஒன்றியத்தின் காலை போசனத்தை உண்ட பின் புறப்பட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் குருகுலத்தை வந்தடைந்தனர்

இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ், உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் ஆகியோர் விடுத்த அழைப்பையேற்றே, இவர்கள் அங்கு விஜயம் செய்தனர்.

மிஷனுக்கான இவ்விஜயம் வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெறுவதால் மிக முக்கியத்துவம் பெறுகிறது. கல்லடி இ.கி.மிஷனில் வரவேற்கப்பட்ட இவர்களுக்கு,பகல் மதியபோசன விருந்துபசாரம் பாயாசம், மோருடன் வழங்கப்பட்டது.

முன்னதாக இராமகிருஷ்ண ஆலயத்தில் பஜனையும், விசேட பூஜையும் இடம்பெற்றன. இல்ல மாணவர்கள், பாதயாத்திரீகர்கள் இணைந்து சுவாமி நீலமாதவானந்தா ஜீ தலைமையில் ஒரு மணி நேரம் பஜனை செய்தனர்.

அவ்வமயம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , பட்டிப்பளை மேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சிவஞானம் அகிலேஸ்வரன் ,உதவி கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் இதில்,கலந்து சிறப்பித்தனர்.

வைத்திய நிபுணர் டாக்டர் சுந்தரேசன் தலைமையிலான குழுவினர்,யாத்திரீகர்களை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தினர்.

பாதயாத்திரை குழுத்தலைவர் சி.ஜெயராசா தெரிவிக்கையில்..

வரலாற்றில் முதல் தடவையாக மிஷனுக்கு செல்வது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கின்றது. யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த எங்களில் 99வீதமானவருக்கு மிஷன் பற்றித்தெரியாது. இங்கு வந்த பின்பே சுவாமிகளது அன்பான வரவேற்பையும், உபசரிப்பையும் உணரமுடிந்தது.குருகுல மாணவர்கள் நேரத்திற்கு ஒழுங்குடன் நடப்பதை அவதானிக்க முடிந்தது.

ஆகவே, எங்களை அன்புடன் அழைத்த சுவாமிகளுக்கு நன்றி கூறுகின்றோம். அதற்காக ஒருங்கிணைப்பைச் செய்த எமது ஆலோசகர் சகாதேவராஜா ஜயாவுக்கும் நன்றிகள்.

இன்னும் இரண்டு தினங்களில் நாங்கள் அம்பாறை மாவட்டத்தை அடைவோம் .

(22)உகந்தைமலை முருகன் அருகிலுள்ள காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் அதனூடாக காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றோம். முருகன் அருளால் எதிர்வரும் (28) கதிர்காமத்தை சென்றடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...