வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம் தீர்த்த வீதி, பரியலம்விடும் இடத்தை விடுவிக்குமாறு கோரிக்கை

வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் தீர்த்த வீதி, பரியலம்விடும் இடம் என்பவற்றை விடுவிக்குமாறு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

முல்லைத்தீவு, வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் தீர்த்த வீதி மற்றும் பரியலம் விடும் இடம் என்பவற்றை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து தருமாறு கோரி மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை கடிதமொன்று வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. 

ஆலயத்தின் தீர்த்த வீதி, பரியலம் விடும் இடம் விடுவித்தல் தொடர்பானது எனும் தலைப்பில் அரசாங்க அதிபரிடம் கடிதம் எழுதப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வின் முதல் நிகழ்வாக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. வீதியானது இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எமது ஆலயத்தின் தீர்த்த வீதியூடாக செல்ல இராணுவம் தடுத்தமையால் வேறு பாதை ஊடாக சென்று தீர்த்தம் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.  

இதன் காரணமாக சில அசாதாரண நிகழ்வுகளும் இடம்பெற்றது. பரியலம் வழிவிடும் இடத்தில் சீமெந்தினால் தூண்கள் அமைக்கப்பட்டு இரும்பினால் கதவும் அமைப்பட்டிருந்தது.  

இப்போது அவ்விடமானது இராணுவத்தினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகமாகிய நாங்கள் தங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எமது ஆலய சம்பிரதாயங்களுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு இடங்களையும் இராணுவத்திடமிருந்து மீட்டு தருமாறு மிகவும் பணிவாக கேட்டுக்கொள்கிறோம். 

எமக்கான பதில் மூன்று நாட்களுக்குள் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாங்குளம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...