என் எழுத்துப் பயணத்தில் அச்சுக்கலை அன்றும் இன்றும்

மனிதனுக்கு தனது வாழ்நாளில் தோன்றும் வித்தியாசமான ஆர்வம் அல்லது ஈடுபாடு போன்றவற்றில் எழுத்தும் ஒன்றாகும். நான் எழுதிய முதற் படைப்பான புதுக்கவிதை ஒன்று 'சிரித்திரன்' சஞ்சிகையில் பிரசுரமாகி, சஞ்சிகையை விலை கொடுத்து வாங்கி, அதை ஒரு குழந்தை போல அணைத்தபடி ஒரு நாளில் பதினைந்து தடவைகளுக்கு மேலாக வாசித்து, பின்னர் சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

இது நிச்சயமாக 1972ஆம் ஆண்டில் ஒரு நாளாக இருக்கலாம். சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களை அந்த நாட்களில் நெருக்கமாக சூழ்ந்திருந்த படைப்பாளிகளில், சசி கிருஷ்ணமூர்த்தி, ராதேயன், டானியல் அன்ரனி போன்றவர்கள் அடங்குவார்கள். ஒரு கவிதை மூலம் கிடைத்த அங்கீகாரம் தொடர்ந்து சில புதுக்கவிதைகளை சிரித்தினின் பிரசுரமாகும் வாய்ப்புக்களை எனக்கு தந்தது. 

அதனைத் தொடர்ந்து யாழ்பபாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ‘செம்மலர்கள் இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பில் நன்கு அறியப்பெற்ற பல படைப்பாளிகள் முக்கிய பதவிகளில் இருந்து அதை இயக்கிச் செல்ல, நானும் அவர்கள் நடந்து செல்லும் தடங்களில் என் பாதம் பதித்து எனது பயணத்தை இலகுவாக்கிக் கொண்டது போன்ற ஒரு பசுமையான நினைவு இப்போது பளிச்சிடுகின்றது. 

மேற்குலக நாடொன்றில் தற்செயலாக நான் தேர்ந்தெடுத்த பத்திரிகைத் துறைக்குள் காலடி எழுத்து வைத்து சுமார் 28வருடங்கள் பயணித்து வெற்றிகள், தோல்விகள், அவமானங்கள் என அனைத்தையும் அ|னுபவித்து நிற்கையில்தான் ஒரு நாள் என் எழுத்துப் பயணத்தின் ஆரம்ப நாட்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. 

அது ‘கொரோனா’ உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய 2020மார்ச் மாதம். ஒரு நாள் எனது முகநூல் பக்கத்தில் கனடாவில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் உருத்திரமூர்த்தி சேரன் ஒரு பிரசுரத்தைப் பதிவு செய்திருந்தார். நான் முகநூலைத் திறந்த போது, அந்த பிரசுரமே என்னைப் பார்த்துச் சிரித்தபடி வரவேற்றது. (அதை இந்தப் பக்கத்தில் காணலாம்).

முகநூலில் காணப்பட்ட தகவல்களின்படி அந்தப் பிரசுரத்தை தனது முகநூலில் பதிவிட்டவர், எனது நாற்பத்தைந்து வருட கால இலக்கிய நண்பர் புத்தளத்துக் கவிஞர் ஜவாத் மரைக்கார் என்றும், இந்த பிரசுரத்திற்கும் எனக்கும் ‘அதிகம்’ தொடர்பு உள்ளது என்று உணர்ந்து கொண்டு கவிஞர் சேரன் எனது முகநூல் பக்கத்தில் அதை ஏற்றம் செய்திருக்கின்றார் என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன்.

அந்த நாட்களில் இருந்த அச்சுத் தொழில் சம்பந்தப்பட்ட வளர்ச்சியும் வா ய்ப்புக்களும் இவ்வளவுதான் என்று எனக்கு உணர்த்திய அந்த பிரசுரத்தை பிரதி எடுத்து மிகுந்த ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன். அந்தப் பிரசுரம் அச்சான அச்சுக் கூடம் எனக்கு ஞாபகம் வந்தது. கைகளால் அச்சுக் கோர்த்து, கால்களால் இயக்கும் அச்சு இயந்திரத்தில் வெட்டப்பட்ட காகிதங்களை கைளால் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து அச்சாகிய அந்த பிரசுரத்தை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன். 

ஆமாம். 1972ஆம் ஆண்டளவில் சிரித்திரன் சஞ்சிகை மூலமாக கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் அறிமுகமான நான் எழுதிய கவிதைகள் அடங்கிய 'போலிகள்’ என்னும் புதுக்கவிதையின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பே அந்தப் பிரசுரமாகும்.

ஆர்.என். லோகேந்திரலிங்கம்
கனடா


Add new comment

Or log in with...