அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற ராஜேந்தர் குணமடைந்தார்

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளார்.

சென்னையில் திடீரென சுகவீனமுற்ற அவருக்கு வயிற்றில் சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், நடிகர் சிம்பு அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக் கொண்டார்.

இதையடுத்து அமெரிக்காவுக்கு டி.ராஜேந்தர் அழைத்துச் செல்லப்பட்டார். வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். செப்டம்பர் 15 ஆம் திகதி சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியாகும் சமயத்தில் சென்னைக்குத் திரும்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரையிலும் உடனிருந்து, அனைத்துப் பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிம்பு தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர். அப்பாவை அங்கே விட்டு விட்டு வந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தந்தையுடன் இருக்கும் சிறு வயது போட்டோவை சிம்பு பதிவிட்டு இருந்தார்.


Add new comment

Or log in with...