கதிர்காமம் யாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை ஜூலை 22 முதல் ஓகஸ்ட் 05 வரை திறந்திருக்கும்

உகந்தையில் அம்பாறை அரச அதிபர் மாநாட்டில் தீர்மானம்

கதிர்காமம் ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி மூடப்படும். இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையிலான மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

உகந்தமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பிலான முன்னோடிக் கூட்டம் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் 22 ஆம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் காலை 6 மணிக்கு இடம்பெறும் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு உத்தியோக பூர்வமாக காட்டுவழிப்பாதை யாத்திரிகர்களுக்காக திறந்து விடப்பட இருக்கின்றது. அன்றைய தினம் பி.ப 3 மணிக்கு மூடப்படும் பாதை தொடர்ந்து வரும் 14 நாட்கள் அதாவது ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இம்மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது. அதேவேளை உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இம்மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.

மேற்படி கூட்டத்தில் அம்பாறை அரச அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள், பாணமை விகாராதிபதி வண.சந்திரரத்ன ஹிமி, ஆலய பரிபாலனசபைத் தலைவர் சுதுநிலமே திசாநாயக மற்றும் பொத்துவில், லாஹூகல, ஆலயடிவேம்பு ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் பிரதிநிதி, வன இலாகாவின் பிரதிநிதி, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, லாஹூகல பிரதேச சபையின் பிரதிநிதி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிரதிநிதி, மொனறாகலை மாவட்ட செயலகத்தின் பிரதிநிதி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன், நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், எரிபொருள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருக்கின்றபோதும் யாத்திரிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் திணைக்களங்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்க முன்வந்திருப்பதாகவும், யாத்திரிகர்கள் குடிநீர் போன்றவற்றை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

காட்டுப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி முதல் 14நாட்கள் திறந்திருக்கும். அக்காலப் பகுதியில் காட்டுப் பாதையால் பயணிப்போர் பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடைசெய்ய வேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில் வழங்க முடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும். ஆலயத்திற்கு வரும் அடியார்கள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக 31 தண்ணீர்த் தாங்கிகள் வைக்கப்பட வேண்டும்.இராணுவம் விசேடஅதிரடிப்படை இதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறை கச்சேரியும் ஒரு வவுசரை வழங்கும். விசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பி வைக்கும். காட்டுப் பாதையால் செல்லும் யாத்திரிகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ், வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவம் என்பன இணைந்து வழங்கும். உகந்தயை அடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரிகர்கள் கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சுமார் 25 ஆயிரம்

பாதயாத்திரிகர்கள் பயணித்துள்ளனர். எனினும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இக்காட்டுப் பாதை திறக்கப்படவில்லை.

ஆதலால் பாதை காடு மண்டிக் காணப்படும். அத்துடன் மிருகங்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் இராணுவ பாதுகாப்பு மேற்கொள்ளப் படவுள்ளது. இதேவேளை இவ்வாண்டு மேலும் ஆயிரக்கணக்கான அதிக அளவான பக்தர்கள் பாதயாத்திரையில் பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இராணுவமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடத்தும். உகந்தைமலை முருகன் ஆலய வளாகத்தில் மின்சார வசதி, சுகாதார வசதி யாத்திரிகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் வழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வி.ரி. சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...