ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலா மேம்பாட்டில் இராணுவத்தினர் மக்கள் பாரியளவில் ஆதரவு

ஜம்மு - காஷ்மீரின் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இராணுவத்தினர் அளித்துவரும் பங்களிப்புக்கு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் பாரியளவிலான ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது என்று 'புரோகேரளா' இணையதளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த இணையதளம் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, பயங்கரவாதம் காரணமாக கடந்த 30 வருடங்களாக நிலவிவரும் விரக்தி மற்றும் நிச்சயமற்ற நிலையிலிருந்து ஜம்மு காஷ்மீரை மீட்டெடுப்பதற்காக இந்திய இராணுவத்தினர் தொடரான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கேற்ப மக்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவும் நோக்கில் நல்லெண்ணப் பாடசாலைகளை நடாத்தி வருவதோடு திறமைமிகு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்குகின்றனர். அத்தோடு விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், திறமைக்கான நிகழ்ச்சிகள், துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு உதவுதல் என்பனவும் ஜம்மு காஷ்மீரில் இராணுவத்தினரின் கலாசாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இராணுவத்தினர் 2021 பெப்ரவரியில் எல்லைக்கோட்டு கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் இமாலயப் பிராந்திய எல்லைகளிலும் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் கண்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்தும் திட்டத்தை இராணுவத்தினர் ஆரம்பித்தனர். 

இதற்கு ஏற்ப, வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் உல்லாசப் பயணிகளுக்கான உணவகமொன்று உடனே அமைக்கப்பட்டது. இந்த உணவகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் பயனாக பிரதேச மக்கள் வேலைவாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர்.

இராணுவத்தினரின் இம்முயற்சியில் கவரப்பட்ட உள்ளூர் மக்களும் சிறிய உணவகங்களை ஆரம்பித்து தமது வாழ்வாதாரத்திற்கான உழைப்பில் ஈடுபட்டுள்ளனர்.  எல்லையோரக் கிராமங்களில் உணவகங்களும்  ஹோட்டல்களும் உருவாகியுள்ளன.  உல்லாசப் பயணத்துறை ஊக்குவிப்புக்கான புதிய திட்டங்களையும் இராணுவத்தினர் ஊக்குவித்து வருகின்றனர். இதன் பயனாக கிராம மக்கள் சுற்றுலாத் தலங்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த குரேஸ் பள்ளத்தாக்குக்கு கடந்தாண்டு 15,000 பேரும் இவ்வருடத்தில் இற்றை வரையும் 13,000 பேரும் வருகை தந்துள்ளனர். உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் இங்கு பலவிதமான  ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

எல்லைக்கோட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு சுற்றுலா தலமாக பாங்கஸ் பள்ளத்தாக்கு விளங்குகிறது.  யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் இப்பள்ளத்தாக்கு பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.  அதற்கேற்ப சுற்றுலா வரைபடத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இப்பள்ளத்தாக்கைப் பார்வையிட வருகைதரும் இயற்கை ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் இராணுவத்தினர் இங்கு தங்கியிருந்து பார்வையாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். அனைவரும் பார்வையிட விரும்பும் இடமாக இப்பள்ளத்தாக்கை மேம்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு காஷ்மீரின் உரி எல்லைக்கோட்டுக்கு அருகிலும் இராணுவத்தினர் உணவகமொன்றை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் உரி, ரஜோரி மற்றும் பூஞ்சிலுள்ள சகன்-தா-பாக் ஆகிய பகுதிகளிலுள்ள எல்லைக்கோட்டு பிரதேசங்களையும் எல்லை சுற்றுலா தலங்களாக மேம்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுலா அமைச்சு ஏற்கனவே அங்கீகாரமளித்திருப்பது தெரிந்ததே.


Add new comment

Or log in with...