தமிழ் மொழியையும், இனத்தையும் காப்பது தி.மு.க. அரசு

தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதியையும், மதத்தையும் தாண்டி மொழியால் இணைக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான 'ஃபெட்னா' அமைப்பின் 35ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் ஒட்டுமொத்தமான அமைப்பான - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான 'ஃபெட்னா' அமைப்பைச் சார்ந்த - அதன் அமைப்பாளர் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம். தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் தாய்வீடு. உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழும் இனம் தமிழினம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.

தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசுதான். ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி என கொண்டு வந்தது திமுக ஆட்சிதான்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது தி.மு.க அரசு. தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரை துடைக்க குறிக்கோள் கொண்டுள்ளது தி.மு.க அரசு. ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயராக இருந்தது.

ஓராண்டாக ஒரு இயக்கத்தின் பெயராக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழ்மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது தி.மு.க அரசுதான்" எனத் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...