கொலம்பிய சிறையில் கலவரம்: 51 பேர் பலி

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் துலுவா நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற கலவரத்தின்போது ஏற்பட்ட தீயில் 51 கைதிகள் உயிரிழந்திருப்பதோடு மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் கைதிகளால் சிறைக்குள் தீ வைக்கப்பட்டதாக தேசிய கைதிகள் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கலவரத்தை நிறுத்துவதற்கு காவலர்கள் நடவடிக்கை எடுத்துபோதும் கைதிகள் மெத்தைகளுக்கு தீ வைத்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் எந்தக் கைதியும் தப்பிச் செல்லவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் சினமுற்ற கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் சிறைக் கதவுகளை அடித்து நொறுக்கினர். சிலர் அன்புக்குரியவர்கள் பற்றித் தகவல் கேட்டு அழுது புலம்பினர்.

சிறையில் மொத்தம் 1,267 கைதிகள் இருந்தனர். தீ மூண்ட பகுதியில் 180 கைதிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கொலம்பியச் சிறைகளில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களைப் பொறுத்தவரை இந்த சம்பவம் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.

அந்தச் சிறைகளில் பொதுவாகவே அதிகமான கைதிகள் இருப்பது வழக்கம். கொலம்பியாவில் உள்ள 132 சிறைகளில்் 81,000 கைதிகளுக்கு மட்டுமே இடமுள்ளது. ஆயினும் 97,000 கைதிகள் வரை அடைக்கப்படுவதாக அதிகாரபூர்வப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

எனினும் லத்தீன் அமெரிக்காவில் கொடிய சிறைக் கலவரங்கள் அசாதாரணமானது அல்ல. கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடோரில், 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆறு கலவரங்களில் கிட்டத்தட்ட 400 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...