போதைப் பழக்கமுள்ளோருக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க சகலரும் முன்வர வேண்டும்

போதைப்பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை நற்பிரஜைகளாக்கி மீண்டும்  சமூகத்துடன் இணைக்கும் செயற்திட்டத்தின் மூலமே, சிறந்த பலன்களைப் பெற முடியுமென்று புத்தளம் நகரபிதா எம்,எஸ்,எம்,ரபீக் தெரிவித்தார்.

புத்தளம் முக்கூட்டுத் தலைமைகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த போதை ஒழிப்பு  மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்நிகழ்வில் (24) பேசிய நகர பிதா, போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக் கும் திட்டத்துக்கு நான், தலைமை தாங்கவுள்ளேன்.

நகரசபை உறுப்பினர்கள் அடங்கலாக பெரியபள்ளிவாசல் மற்றும் ஜம்இய்யதுல் உலமா ஆகிய சமூக இயக்கங்க ளின் பங்களிப்பும் இதற்கு அவசியம். இதற்காக அர்ப்பணி க்கவும் தயாராக வேண்டும்.  இவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பை  பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சர்வமத தலைமைகளின் தெளிவூட்டல் உரைகளும் இங்கு இடம்பெற்றன.நிகழ்வில், விஷேட வளவாளர்களால் போதை மீட்பு விழிப்புணர்வுச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டன. 

சர்வதேச போதை ஒழிப்புத்தினத்தை முன்னிட்டு நகர சபையால் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு காணொளியும் வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தற்காலத்தில் இளைய தலைமுறையினரிடையே புரையோடிப்போயுள்ள போதைப் பாவனையின் அவல நிலைமைகள் குறித்து தயாரிக்கப்பட்ட "மெத்" (METH) எனும் விழிப்புணர்வு குறுந்திரைப்படமும் மேடையில் திரையிடப்பட்டது.

குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களைப் பாராட்டி பணப் பரிசும், நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன. நகரசபை உறுப்பினர்களுடன் இணைந்து, நகரபிதா இவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் உலமாக்கள், சர்வமத தலைமைகள், பெரியபள்ளிவாசல் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள், பல்துறைசார் அரச திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு உயரதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடங்கலாக பொது மக்களும் கலந்துகொண்டனர்.

(புத்தளம் தினகரன் நிருபர்) 

 


Add new comment

Or log in with...