IMF இடமிருந்து இலங்கைக்கு 01 பில்லியன் டொலர் கடன் கையிருப்பு

இலங்கை வந்துள்ள IMF குழுவுடனான பேச்சுவார்த்தையில் சாதகம்

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக நம்பகரமாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

அரசியல், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு உதவுவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் குழு அண்மையில் இலங்கை வந்தது. இந்தக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தனர்.

ஒரு வார காலம் இந்நாட்டில் தங்கியிருக்கும் இப் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர், நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தூதுக்குழு தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு 01 பில்லியன் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

கடனாக அன்றி கையிருப்பாக அந்த நிதி வைப்புச் செய்யப்படவுள்ளதோடு இதன் மூலம் வெறுமையாக உள்ள இலங்கை கையிருப்பு ஒரு பில்லியன் டொலர்களாக உயர இருக்கிறது. இதனூடாக வேறு நாடுகளின் உதவிகளை பெற வாய்ப்பாக அமையுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் (Peter Breuer), செயற்பாட்டுத் தலைவர் (Masahiro Nozaki), வதிவிடப் பிரதிநிதி கலாநிதி (Tubagus Feridhanu setyawan), ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் (Anne Marie Gulde) குழுவே இலங்கை வந்துள்ளதோடு இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய கடன் கையிருப்பு எதிவரும் நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சராக அலி சப்ரி செயற்பட்ட காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு பேச்சுவார்த்தை காலங்கடந்து ஆரம்பிக்கப்பட்டது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டு வருவது தெரிந்ததே.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...