101 வயது நாஜி வதை முகாம் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை

101 வயதான நாஜி வதை முகாமின் முன்னாள் காவலர் ஒருவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஒன்றினால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாஜி படுகொலை தொடர்பிலான போர் குற்றத்தில் சிறைத் தண்டை விதிக்கப்படும் மிக வயதானவராக இவர் பதிவாகியுள்ளார்.

ஜோசப் ஸ்குவட்ஸ் என்ற அந்த முதியவர் 1942 மற்றும் 1945 க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு பெர்லினில் உள்ள சக்சன்ஹோஸ் முகாமில் சிறைக் காவலர் ஒருவராக பணியாற்றி உள்ளார். கொலைக்கு துணை நின்றதாக நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் அவர் குற்றங்காணப்பட்டார்.

பிரன்டன்போர்க் மாநிலத்தில் வாழும் ஓய்வூதிக்காரராக அவர் தாம் நிரபராதி என வாதிட்டார். தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அந்த முகாமில் கொடூரமான குற்றங்கள் நிகழ்ந்தது தமக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார். “நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார் ஸ்குவட்ஸ்.

எனினும் முகாமில் இடம்பெற்ற 3,518 கைதிகளின் கொலையில் அவர் தெரிந்தும் விரும்பியும் பங்கேற்றுள்ளார் என்று அரச வழங்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

1936க்கும் 1945க்கும் இடைப்பட்ட காலத்தில் 200,000க்கும் அதிகமானோர் அந்த வதை முகாமில் அடைக்கப்பட்டிருந்ததாய் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

ஸ்குவட்ஸ் போன்று ஜெர்மனியில் 90 வயதுக்கு மேற்பட்ட மேலும் பலர் கடந்த சில ஆண்டுகளில் தண்டனை பெற்றனர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களைப் பிடித்து, வழக்கு நடத்தி தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் தனிநபர்களின் அரசியல், ஒழுக்கப் பொறுப்புகளை மறுவலியுறுத்தவே இவ்வாறு செய்யப்படுவதாய்க் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.


Add new comment

Or log in with...