அமெரிக்காவில் கைவிடப்பட்ட லொறியில் 46 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கைவிடப்பட்ட கொள்கலன் லொறி ஒன்றில் குறைந்தது 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது நான்கு சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பியவர்கள் அதிக உடல் சூட்டுடன் காணப்பட்டதாகவும் இவர்கள் வெப்பத் தாக்கம் மற்றும் வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சான் அன்டோனியோ புறநகர் பகுதி அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையில் இருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இது ஆட்கடத்தல்காரர்களின் பிரதான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழையும் ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தொலைதூர பகுதிகளில் சந்திக்கும் ஆட்கடத்தல்காரர்கள் அவர்களை அழைத்துவர பெரும்பாலும் லொறிகளையே பயன்படுத்துகின்றனர்.

“அவர்கள் குடும்பங்களை கொண்டிருந்தனர். சிறந்த வாழ்க்கை ஒன்றை தேட முயற்சித்திருக்கலாம்” என்று சான் அன்டோனியோ மேயர் நைரென்பேர்க் தெரிவித்தார். “இது பயங்கரமான, மனித அவலத்தை தவிர ஒன்றுமில்லை” என்றும் அவர் கூறினார்.

இறந்த உடல்கள் பற்றிய செய்தி கிடைத்ததை அடுத்து அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி கடந்த திங்கட்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

”ஒரு லொறியைத் திறக்கும்போது அதற்குள் நாங்கள் இறந்த உடல்களின் அடுக்குகளைப் பார்த்திருக்கக்கூடாது. நாங்கள் யாரும் அதைக் கற்பனை செய்துகொண்டு வேலைக்கு வருவதில்லை,” என்று சான் அன்டோனியோ தீயணைப்புப் பிரிவின் தலைவர் சார்லஸ் ஹூட் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஓட்டுநரால் கைவிடப்பட்ட வாகனத்தில் குளிரூட்டும் வசதியில்லை என்றும் அதற்குள் குடிநீர் இல்லை என்றும் அவர் கூறினார்.

சான் அன்டோனியோவின் தென்மேற்குப் பகுதியில் ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.

மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரர்ட், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் குவான்தமாலா நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை.

அமெரிக்காவில் புலம்பெயர் குடியேற்றம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாக உள்ளது. அங்கு கடந்த ஆண்டு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பதிவு செய்யப்படாத ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மிகவும் ஆபத்தான, பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்து வந்திருந்தனர்.

கோடை மாதங்களில் சான் அன்டோனியோ மிகவும் வெப்பமாக இருக்கும். கடந்த திங்கட்கிழமையன்று 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையிலிருந்து தப்பித்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களில் பலர், அமெரிக்க எல்லையைத் தாண்டி வருவதற்காக ஆட்கடத்தல்காரர்களுக்குப் பெரும் தொகையைச் செலுத்துகிறார்கள்.

அண்மைய ஆண்டுகளில், புலம்பெயர்ந்தோர் தங்கள் பயணத்தின்போது உயிரிழந்ததற்கு இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், திங்கட் கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டதைப் போல எந்தவொரு கொடிய நிகழ்வும் இதுவரை இல்லை.


Add new comment

Or log in with...