இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது மூவகையான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை ஆஸி. அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்ற, அடுத்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை இலங்கை அணி 3-2 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 31 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஆஸி. அணி 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இலங்கை அணி வெறும் 4 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இலங்கை அணி இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு 17 வருடங்களின் பின்னர் ஆஸி. அணியுடன் 3-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருந்தது.

கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு ஜனவரி வரையில் 13 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஆஸி. அணி 11 தொடர்களை வென்றுள்ள நிலையில், இலங்கை அணி இரு தொடர்களை மாத்திரம் வென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள், ரி 20 தொடர்களில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

இதில் ஒருநாள் தொடரில் உபாதைக்குள்ளான அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவதற்கான உடற்தகுதியினைப் பெற்றிருப்பதாக ஈஎஸ்பிஎன் செய்தித்தளம் குறிப்பிட்டிருக்கின்றது.

அதேநேரம் இரு அணிகளுக்குமிடையிலான ரி 20 தொடரின் முதல் போட்டியில் விரல் உபாதைக்குள்ளாகிய அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதில் இன்னும் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான ட்ராவிஸ் ஹெட்டும் தசை உபாதையில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் அவர் இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடுவது சிரமம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.இவர்கள் தவிர சுமார் ஐந்து வருட இடைவெளி ஒன்றின் பின்னர் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பினைப் பெற்றிருந்த கிளன் மெக்ஸ்வெல், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதன் காரணமாக இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் கொண்டதாக தொடராக அமைகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை டெஸ்ட் அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), பெத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ மெத்யூஸ், தனஞ்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, ஜெப்ரி வெண்டர்சே

மேலதிக வீரர்கள்: துனித் வெல்லாலகே, லக்ஷித ரசன்ஜன


Add new comment

Or log in with...