இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான மருதமுனையை சேர்ந்த கலாநிதி ஐ.எல்.எம் மாஹிர் அப்பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் 2022.06.25 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய 09.11.2020 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது பாடசாலைக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை), உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விஷேட துறையிலும் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டத்தையும் கலாநிதி பட்டத்தையும் இவர் நிறைவு செய்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 தொடக்கம் 2019 காலம் வரை சமூக விஞ்ஞானத் துறையின் தலைவராகவும் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ள இவர் உளவியல், மெய்யியல் துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு பல தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார். துறை சார்ந்த பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
சமூக செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இவர், சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் செயலாளராக செயற்பட்டு சிறப்பான சேவைகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலின் (Grand Mosque) தலைவராகவும் பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஸ்தாபனத்தின் ஆலோசகராகவும், மருதமுனை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.
இவர் சமூக அமைப்புக்களிலும் தனது பங்களிப்புக்களை செய்து வருகிறார். இவர் மருதமுனையை சேர்ந்த இஸ்மா லெப்பை மற்றும் ஆயிஷா உம்மாவின் புதல்வராவார்.
ஏ.எல்.எம். ஷினாஸ் - பெரிய நீலாவணை விசேட நிருபர்
Add new comment