சேதனப் பசளை வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் எஸென்ட் திட்டம்

சுற்றாடல் மற்றும் போசாக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக சமூகத்திற்கு உதவுதல் (ACCEND-எஸென்ட்) திட்டத்தின் மூலம் போஷாக்கான வீட்டுத் தோட்டம் தொடர்பான கையேடு ஒன்றை வெளியிடும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி விவசாய சேவைகள் திணைக்களத்தில், விவசாய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் ஏ .எச்.எம்.எல் அபேரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்த கையேடு எட்ரா ஸ்ரீலங்காவின் முகநூல் பக்கத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தோட்ட மற்றும் கிராமிய மக்களின் நீர், ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் போசணையை மேம்படுத்தும் நோக்கத்தில் எட்ரா ஸ்ரீலங்கா மற்றும் ஒக்ஸ்பார்ம் ஸ்ரீலங்கா இணைந்து செயல்படுத்தும் எஸென்ட் திட்டம் ஐரோப்பிய யூனியனால் நிதி வழங்கப்படும் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் குடும்ப போசாக்கு நிலைமையை அதிகரிப்பதற்காகவும் மற்றும் இந்த மக்களுக்கிடையே காணப்படும் மந்த போசணையை குறைக்கும் நோக்கத்துக்காகவும் 1500 வீட்டு தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் மூலம் சேதன வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு அதன் பயனாளர்களுக்கு தொடர்ந்தும் ஆலோசனைகள் மற்றும் பயிர்விதைகளை வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மிகவும் வெற்றியளித்துள்ளது. மேலதிக உற்பத்தி, விற்பனை மூலம் குறிப்பிட்டளவு வருமானத்தை பெறக் கூடியதாக இருந்ததாகவும், கொவிட்19 தொற்று அதிகமாக காணப்பட்ட வேளையில் தங்களது உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள கூடியதாக இருந்ததாகவும் இத்திட்டத்தின் பயனாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வீட்டுத் தோட்டம் என்பது முன்னெப்போதையும் விட உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் பிரவேசமாகும்.

இத்திட்டத்தின் பயிற்சிகள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை மற்றும் தத்துவார்த்த அறிவை பயன்படுத்தி 'போஷாக்குமிக்க வீட்டுத் தோட்டம்' தயாரிக்கப்பட்டுள்ளது. தங்களது வீட்டுத் தோட்டத்திலுள்ள இடத்தைப் பயன்படுத்தி சேதனப் பசளை வீட்டுத் தோட்டம் ஒன்றை ஆரம்பித்து நடத்துதல், சேதனப் பசளை மற்றும் கிருமிநாசினி உற்பத்தி, பாரம்பரிய விவசாய முறைகள் உள்ளிட்ட வீட்டுத் தோட்டம் மூலம் போஷாக்கு மற்றும் பொருளாதார ரீதியாக நன்மை பெற்றுக் கொள்ளக் கூடிய விதம் தொடர்பான தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகத்தை தற்போது adrasrilanka.org/nhgis முகவரி மூலம் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.


Add new comment

Or log in with...