நலிவுற்ற மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் அமரர் ராஜநாயகம்

இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி 1935 இல் ஆரம்பமானதென்றால், அதற்கடுத்த ஆண்டில் 1936 இல் ராஜநாயகம் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் இடதுசாரி முற்போக்காளர்களில் ராஜநாயகம்(1936 - 2022) தனிநாயகமாகப் பிரகாசித்தார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் ஒரேட்டர் சுப்ரமணியம், என்.எஸ்.கந்தையா போன்ற பெரியார்களின் கீழ் பயின்ற ராஜநாயகம் பாடசாலைக் காலத்திலேயே லங்கா சமசமாஜிகளின் கொள்கையில் ஆழ ஊன்றியிருந்தார். ​ெடாக்டர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா, பெர்னார்ட் சொய்சா போன்ற சமசமாஜிகளின் கீழ் அரசியல் பாடம் பயின்ற ராஜநாயகத்தின் ஊனில் -உதிரத்தில் சமூக நீதி, அடிப்படை மனித உரிமை, ஜனநாயக விழுமியங்கள் என்பன செறிந்திருந்தன.

அரசியலின் எல்லாக் கட்டங்களிலும், மோசமான அடக்குமுறைக் காலங்களிலும், புலம்பெயர்ந்த லண்டன் வாழ்விலும் நீக்கமற நிறைந்திருந்த வன்முறை- எச்சரிக்கை- அச்சுறுத்தல் என்றாகிப் போன சூழலிலும் மனித உரிமையின் போர் முரசமாகவே அவர் ஒலித்திருக்கிறார். எங்கெல்லாம் அட்டூழியங்கள் தலைவிரித்தாடினவோ அங்கெல்லாம் அவரது பார்வை குவிந்தது.

அரசாங்க லிகித சேவையாளர் சங்கம் (GCSU)இலங்கை அரசியலின் திசை வழியையே தீர்மானிக்கும் முற்போக்கான சங்கமாக இருந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்த - லங்கா சம சமாஜக் கட்சியின் அயராத தொண்டனாக பாடுபட்ட ராஜநாயகம் அக்கட்சி 1963 இல் தான் இதுகாலவரை கைக்கொண்டிருந்த உன்னத நோக்கங்களைக் கைகழுவிய போது, அக்கட்சியை விட்டு வெளியேறினார்.

1971 இல் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது சிறைவைக்கப்பட்ட முக்கிய தலைவர்களுக்காக பால தம்போவின் கீழ், நீதிமன்றங்களில் வழக்காடிய ராஜநாயகம் இறுதிவரை அப்போர்க்குணத்தைக் கொண்டிருந்தார்.

குற்றவியல் சட்டத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த ராஜநாயகம், அத்துறையில் தொழில் பார்த்திருந்தால் பணமும் புகழும் கொண்ட வழக்கறிஞராகத் திகழ்ந்திருப்பார். அதே மாதிரி ஒரு வாய்ப்பு, லண்டனில் ஒரு கார்ப்பரேட் சட்ட நிறுவனத்திடமிருந்து வந்த போது, "அந்தத் தொழிலை நான் ஏற்றிருந்தால் Tamil Times பத்திரிகையை என்னால் கொண்டு வர முடியாது" என்று அந்த நல்வாய்ப்பைத் தூக்கிப் போட்டவர் ராஜநாயகம்.

தொழிற்சங்கவாதியாக புடம்போடப்பட்ட ராஜநாயகம் சமூகத்தில் வலுவற்ற கூட்டத்தின் உரிமைக்குரலாகவே விளங்கினார்.

மனித அழிவுகள் குறித்து மனம் நொந்தவர் ராஜநாயகம். அந்த மண்ணில் அனைத்து இன மக்களும் சம உரிமை படைத்தோராய், சமாதான வாழ்வு வாழ வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் அவர்.

சந்திரிகா_- புலிகள் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, மீண்டும் மோதல் வெடித்து, ஏழு வாரங்களில் இரு பக்கமும் 800 பேர் பலியான போது மனம் நொந்த ராஜநாயகம் The Art of the Possible என்ற தலைப்பில் ஓர் ஆசிரியர் தலையங்கம் எழுதியிருந்தார்.

எழுபதுகளில் இலங்கையில் அரசியல் நிலைமைகள் சீரழிந்து போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ராஜநாயகம் லண்டன் வந்தார். எண்பதுகளில் தமிழருக்கெதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்த போது, அவர்களின் குரலை உலக அரங்கில் ஒலிக்கவும், இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆவலில் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் இலங்கையர்களுக்காகவும் அவர் Tamil Times பத்திரிகையை நடத்தினார்.

இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாதாந்த ஆங்கிலப் பத்திரிகை வெளிவந்தது பெருஞ் சாதனைதான். அமரர் என்.எஸ்.கந்தையாவின் நிர்வாகத்தில், ஓவியர் கே.கே.ராஜாவின் வடிவமைப்பில் அந்தப் பத்திரிகை வெளியாகி, என்.எஸ்.கந்தையாவின் மறைவுடன் அப்பத்திரிகை செயலிழந்தது துரதிர்ஷ்டமாகும். இலங்கை அரசியல் நூல்களைக் கொண்ட அரும்பெரும் நூலகத்தை அவர் கொண்டிருந்தார்.

இலங்கைப் பத்திரிகைச் செய்திகள் பற்றிய பெருஞ் செய்திக்கோவைகளை அவர் பேணியிருந்தார்.

மாற்றுக்கருத்தாளர்களின் மையமாக அவர் திகழ்ந்தார். ஒடுக்கப்பட்ட குரல்களை அவர் எப்போதும் மேடைகளில் பிரதிபலித்திருக்கிறார். அதிகாரபலம் கொண்டு திரிந்தவர்களின் அச்சுறுத்தலை அவர் எதிர்கொண்டார். ராஜநாயகத்தின் Tamil Times ஆசிரியர் தலையங்கங்கள் Sri Lanka Through Troubled Times என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக சுமார் 750 பக்கங்களில் வெளியாகியுள்ளது. ராஜநாயகத்தின் ஏனைய ஆங்கிலக்கட்டுரைகளும் இன்னும் ஓராயிரம் பக்கங்களை உள்ளடக்கும். இனிய சுபாவமும் விருந்தோம்பும் பண்பும், தங்கு தடையற்ற உரையாடலும் நகைச்சுவையுணர்வும், நறுக்கென்ற பதிலும் அவரின் முத்திரைகள்.

ஒரு முற்போக்கு மனிதரின், இலட்சிய உள்ளத்தின் மறைவு உலகின் உன்னதமொன்றை பறித்துச் சென்ற உணர்வை அவரை அறிந்தவர்களின் நெஞ்சில் என்றும் பொறித்திருக்கும்.

மு. நித்தியானந்தன்


Add new comment

Or log in with...