பெரும்போகத்திற்கு நீர் வழங்க 20 குளங்கள் புனரமைப்பு

- 11 குளங்கள் தற்போது நீர் வழங்கக் கூடிய நிலையில்
- 9 குளங்கள் இறுதிக் கட்ட புனரரைப்புபு பணியில்

எதிர்வரும் பெரும்போகத்திற்கு நீர் வழங்குவதற்காக 20 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. அதில் 11 குளங்கள் தற்போது நீர் வழங்கக் கூடிய அளவுக்கு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 9 குளங்கள் புனரமைப்பு செயற்பாடுகளின் இறுதிக் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

பெரும்போகத்திற்குத் தேவையான உரம் வழங்கப்படுவதற்கு முன்னர் நீர் வழங்குவதற்கு ஏற்றபடி குளங்களை புனரமைப்பு செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

தற்போதுள்ள உணவுப் பிரச்சினைக்கு துரிதமான தீர்வு ஒன்று வழங்குவதற்கான அரசின் விவசாயப் புரட்சி வேலைத்திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் புனரமைப்பு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் கீழ் பாழடைந்த கிராமியக் 5,000 குளங்கள் விவசாயத்திற்காக புனரமைப்பு செய்யப்படும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடல் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (28) இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக பதுளை, மொனராகலை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து முதற் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக பதுளையில் இருந்து 13 குளங்களும் மொனராகலை மாட்டத்திலிருந்து 6 குளங்களும் குருணாகல் மாவட்டத்தில் இருந்து ஒரு குளமும் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது. இதன் கீழ் ஏறக்குறைய 600 ஏக்கர் வயல்கள் பயிர் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் குருணாகல் அநுராதபுர வீதியின் இரு புறத்திலுமுள்ள 9 குளங்களும் புனரமைப்பு செய்யப்படவிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில் குளங்களை புனரமைப்பு செய்வதனூடாக வீதியில் இரு புறங்களும் அழகுபடுத்தப்படும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக 268 மில்லியன்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த வருடத்திற்குள் 50 குளங்கள் புனரமைப்பு செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு 500 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பதுளையில் 42 குளங்களும் மொனராகலையில் 14 குளங்களும் கண்டியில் 6 குளங்களும் புனரமைப்பு செய்யப்படுவதுடன் இன்னும் பல குளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நீர் கொள்ளளவை அதிகரிப்பதும் இதன் இலக்குகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அதற்காக மண் நிரப்பி குளங்களை அகலப்படுத்தி அடியிலுள்ள சேற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்டு குளக்கட்டுகள் திருத்தப்பட்டு குழாய் மற்றும் கால்வாயிலும் திருத்த வேலைகள் நடைபெற வேண்டும் என்றும் அத்தோடு குளத்தைச் சுற்றி மரங்கள் நடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக உரம், நீர் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. விளைச்சலுக்கு நியாயமான விலையொன்றைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக விவசாயம் மற்றும் உணவு நெருக்கடியைத் தீர்க்க முடியுமாக  இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். பெறப்படுகின்ற நெல் விளைச்சலை விவசாயிகளே அரிசியாக மாற்றி விற்பனை செய்வது அதிக இலாபத்தைத் தரும் என்பதால் விவசாயிகள் அது பற்றி கவனம் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்னாயக்க, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய, கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...