நள்ளிரவில் எரிபொருள் நிரப்ப வந்த பொலிஸ் வாகனத்தை முற்றுகையிட்ட குழு

- வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் தணிவு

வவுனியா நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் எரிபொருள் நிரப்ப வந்த பொலிஸாரை இளைஞர்கள் முற்றுகையிட்டதால் பதற்றநிலை ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு பெற்றோல் முடிவடைந்து விட்டதாக எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இரவு 11.30 மணியளவில் அந்த எரிபொருள் நிலையத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் அவர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் கொள்கலன்களை ஏற்றிச் சென்று எரிபொருள் நிரப்பியுள்ளனர்.

அதனை அவதானித்த அங்கிருந்த இளைஞர்கள் அவர்களின் வாகனத்தையும் பொலிஸாரையும் முற்றுகையிட்டனர். இதன்போது அவ்விடத்தில் இருந்து சில பொலிஸார் அங்கிருந்து சென்றாலும் பொலிஸ் வாகனத்தை எடுத்துச் செல்ல இளைஞர்கள் அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து வாகனத்தின் பொலிஸ் சாரதி மாத்திரம் எரிபொருள் நிலையத்தில் காலை வரை நின்றிருந்தார். நேற்று காலை அங்கு வந்த பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவறுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் செல்ல இளைஞர்கள் இடமளித்தனர்.


Add new comment

Or log in with...