எரிபொருள் விநியோக முறைகேடு; கட்டுப்படுத்தப்படுவது அவசியம்!

எரிபொருள் நெருக்கடி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதற்கு மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் நெருக்கடிகளும் நல்ல சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எரிபொருள் நெருக்கடியானது மக்களின் இயல்பு வாழ்வைப் பாதித்துள்ளது. எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலானவர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் வீதிகளிலும் நாட்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் தோற்றம் பெற்றுள்ள இந்த எரிபொருள் நெருக்கடி தற்போதைய நெருக்கடி நிலையை அடைந்திருக்கின்றது. ஆனால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட திடீர்த் தேடுதல் நடவடிக்கைகளின் போது அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 64 ஆயிரம் லீற்றர் வரை எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வளவு தொகை எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்படும் அளவுக்கு அந்த எரிபொருளானது, எரிபொருள் நிரப்பும் நிலையங்களை விட்டு எவ்வாறு வெளியே சென்றது? அதற்கு துணைபுரிந்த காரணிகள் யாவை? இவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சாதாரணமாக எரிபொருள் பவுஸர் ஒன்று 6500 லீற்றர் கொள்ளக் கூடியதாக விளங்குகிறது. அப்படியிருக்கையில் 64 ஆயிரம் லீற்றர் வரை எரிபொருட்கள் பதுக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்படும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வளவு தொகை எரிபொருட்கள் எத்தனை பவுஸர்களாக இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

தற்போது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்கும் போதும், அதனைப் பெற்றுக் கொள்வதிலும் இடம்பெற்று வரும் ஒழுங்கீனங்களும் முறைகேடுகளும் அவை பதுக்கி வைக்கப்படுவதற்கு பெரிதும் உதவக் கூடியனவாக உள்ளன. இது பலரது கருத்தாக இருக்கின்றது.

அதனால் எரிபொருள் விநியோகத்தின் போதும் அதனைப் பெற்றுக் கொள்வதிலும் இடம்பெறும் முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அப்போதுதான் எரிபொருளை முறைகேடாகப் பெற்றுக் கொள்வதையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் எதிர்பார்ப்பில் பதுக்கி வைப்பதையும் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்திற்காக 'டோக்கன்' முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஒரு முன்னேற்றகர நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் இந்த முறைமையைப் பயன்படுத்தியும் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட முறைகேடுகளை மேற்கொள்ள முடியும் எனப் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இம்முறைமையின் கீழ் பல டோக்கன்களை ஒருவர் பெற்றுக் கொள்ள வாய்ப்பு காணப்படுகிறது. அத்தோடு 'டோக்கன்கள்' அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ஒன்றாகக் கூட சில சமயம் மாறி விடலாம் என்றும் அவ்வாறானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தற்போதைய சூழலில் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகனங்களின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருட்களை விநியோகிக்கும் போது இவ்வாறான முறைகேடுகளை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ள முடியும். அதாவது 'குறித்த இலக்கம் கொண்ட வாகனங்களுக்கு குறித்த நாளில் மாத்திரம்தான் எரிபொருள் வழங்கப்படும்' என்ற முறைமை அறிமுகப்படுத்தப்படும் போது அதன் விநியோகத்தில் இடம்பெறும் பெரும்பாலான முறைகேடுகளை தவிர்த்துக் கூடியதாக இருக்கும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் காணப்படவே செய்கின்றது.

அதேநேரம் எரிபொருள் விநியோகம் மற்றும் பெற்றுக் கொள்ளலில் இடம்பெறும் ஒழுங்கீனங்களை தவிர்த்து அவை ஒழுங்குமுறையாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முப்படையினரையும் பயன்படுத்தலாம். அதன் ஊடாக இங்கு இடம்பெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்ற அபிப்பிராயமும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. நாடு ஏற்கனவே கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருந்த காலப்பகுதியில் அத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை விரைவாகவும் வேகமாகவும் மக்களுக்கு ஒழுங்குமுறையாகப் பெற்றுக் கொடுத்து மக்களின் பாராட்டுக்களை பெற்றுக் கொண்ட பெருமையும் முப்படையினருக்கு உள்ளது.

ஆகவே எரிபொருள் விநியோகத்திலும் அதனைப் பெற்றுக் கொள்வதிலும் இடம்பெறுகின்ற முறைகேடுகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். அதன் ஊடாக எரிபொருளை பதுக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும் மக்கள் எரிபொருளுக்காக எதிர்கொள்ளும் அசௌகரியங்களை குறைத்து கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியும்.


Add new comment

Or log in with...