இலங்கை ரூபாவில் பணம் செலுத்தி இந்தியாவிலிருந்து எரிபொருள்

- இந்திய எரிபொருள் அமைச்சருடன் மிலிந்த மொரகொட பேச்சு
- சிங்கப்பூரிலிருந்தும் எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தை வெற்றி

இலங்கைக்கு தேவையான எரிபொருட்களை பெறுவது தொடர்பில் இந்தியாவுடனும் சிங்கப்பூருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

இதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும் சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் நாட்களில் வந்தடைய உள்ளதாக அறிய வருகிறது.

இலங்கை ரூபாவில் பணம் செலுத்தி இந்தியாவில் இருந்து எரிபொருள் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்திய எரிபொருள் அமைச்சர் ஹர்திப் சிங் பூரியுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பேச்சுவார்ததை நடத்தி வருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

இரு டீசல் கப்பல்களும் இரு பெற்றோல் கப்பல்களும் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பேச்சுக்களின் பலனாக டீசல் கப்பல் ஒன்றை வழங்க இந்தியா உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது. 10 அல்லது 12 நாட்களில் இந்த கப்பல் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை பெற்றோல் கப்பலொன்றை பெறுவது தொடர்பாக சிங்கப்பூரூடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளது.

இந்த கப்பலும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொலர் நெருக்கடி காரணமாக நாட்டுக்குத் தேவையான எரிபொருளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு கடந்த சில நாட்களாக எந்த எரிபொருள் கப்பலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து நீண்ட வரிசை காணப்படுகிறது. (பா)


Add new comment

Or log in with...