இஸ்லாமிய ஒற்றுமையின் அடையாளம் ஹஜ்

இஸ்லாமிய ஒற்றுமை என்ற கருத்து ஒரே மாதிரியான சிந்தனை முறையைக் குறிக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஹஜ் யாத்திரை என்பது உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களைப் பயிற்றுவிப்பதற்கும், அவர்களின் பொருளிய மற்றும் ஆன்மீக வாழ்வில் ஒப்பிட முடியாத நன்மைகளை அடைவதற்கும் - இஸ்லாமிய ஒற்றுமைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தர்ப்பமாகும்.

ஏகத்துவம், இறைபக்தி, ஏகனுக்கு விசுவாசம், மனிதனால் உருவாக்கப்பட்ட தீய அமைப்புகள் மற்றும் சாத்தானிய நெறிமுறைகளுக்கு மறுப்பு, தெய்வீக வரம்புகள் மற்றும் செய்ய வேண்டியவைகளை கடைப்பிடித்தல் போன்ற கருத்துகளுக்கு அர்த்தத்தை வழங்கியது மற்றும் செய்யக் கூடாதவை, மனித குலத்தினரிடையே பிளவை உருவாக்கும் அனைத்து பொருள் கூறுகளிலிருந்தும் விடுதலைஆகிய அனைத்துக்கும் ஹஜ் மகத்தான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

ஹஜ் மற்றும் பைத் அல்-ஹராமின் புனிதம் என்பன சில சிறந்த சமூகக் கருத்துகளின் உட்குறிப்பு ஆகும். அவை இங்கே சுருக்கமாக விவாதிக்கப்படுகின்றன.

1. கஃபாவை வலம் வருதல், மனிதன் சரீர இச்சைகள் மற்றும் விலகல்களிலிருந்து விடுதலையைத் தேடுவதையும், ஏகத்துவக் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் இருப்பதையும் குறிக்கிறது. இஸ்லாமிய உம்மத்தினரிடையே ஒற்றுமையை வெளிப்படுத்த முயற்சிக்கும் தூய மற்றும் நேர்மையான இதயங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தல் ஹஜ் யாத்திரையின் சிறந்த நிஃமத்களில் ஒன்று,

2. ஒவ்வொரு முஸ்லிமும் தனது இனம், பாலினம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தனது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அடக்குமுறை ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றி எந்த அச்சமும் இல்லாமல் மற்ற முஸ்லிம்களுடன் உரையாடி, கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பத்தின் தேவையை ஹஜ் முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது.

ஹஜ் என்பது அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒரு சர்வதேச மன்றமாகும். அவர்கள் தங்கள் சமூகங்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்களை மதிப்பாய்வு செய்து, பொருத்தமான தீர்வுகளைத் தேடவும், ஏனைய முஸ்லிம்கள் மற்றவர்களுக்குத் தங்களின் பொறுப்புகளைக் கவனிப்பதற்காக பல்வேறு வழிகள் மற்றும் அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், ஏகத்துவப்பாதையில் உள்ள தடைகள், அதற்கு எதிரான சதிகள் மற்றும் வஞ்சகமான சூழ்ச்சிகள் பற்றி அறிந்து அவற்றைக் கண்டிக்கவும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம். இக்கருத்தை புனித குர்ஆன் இன்னும் தெளிவாக விளக்கியுள்ளது. (கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்... (சூரா அல்-பகரா: 125)

3. புகலிடமான இப்புனித ஸ்தலத்தின் பாதுகாப்பையும் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையின் மூலமே உறுதி செய்ய முடியும். அதற்கு எதிராக எந்தவிதமான கிளர்ச்சிக்கும் அல்லது நம்பிக்கையாளர்களை அச்சுறுத்துவதற்கும் இடமில்லை என்பதையும் ஹஜ் உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது. பாதுகாப்பு எனும் இந்த குறிக்கோள் உலகம் முழுவதும் நிறுவப்பட வேண்டும், அதை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி உலகளாவியதாக மாற்றுவது அனைத்து விசுவாசிகளின் மீதும் கடமையாகும்.

4. அன்பாலும் பாசத்தாலும் நிரம்பிய விசுவாசிகளின் இதயங்கள் இப்புனித இடத்தின் பால் ஈர்க்கப்படுகின்றன, அங்கு அவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அசுத்தங்களிலிருந்து விடுபட்டு தங்கள் சமூக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியவர்களாக உள்ளனர், அவர்களுடைய தூய அன்பு, கருணை மற்றும் பாசம் ஆகியவற்றின் செய்தியை தங்கள் சமுதாய உறுப்பினர்களிடையே பரப்புகையில், அவர்களின் சக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிறந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையை ஸ்தாபிப்பதற்கான பாதையை வகுத்துக் கொடுக்கிறது. அன்பும் பாசமும் நிறைந்த ஹஜ்ஜின் உணர்ச்சிகரமான சூழல், சந்தேகத்திற்கு இடமின்றி, விசுவாசிகள் அல்லாஹ்வின் செய்தியை உள்வாங்குவதை சாத்தியமாக்குகிறது. 'நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே, ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.' (49:10)

5. இப்புனித ஆலயத்தின் (கஃபா) அருகாமையில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, உலகின் பல்வேறு கூறுகளுக்கு இடையே ஒரு அற்புதமான இயற்கை நல்லிணக்க பாதையை வகுப்பதைக் குறிக்கிறது. இதை அடைவது மனிதனின் மிகப் பெரிய குறிக்கோள்களில் ஒன்று.

ஹஜ் மற்றும் மனிதனின் முழு வாழ்க்கையின் செயல்பாட்டில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இயற்கையான இணக்கத்தை சுட்டிக் காட்டும் ஏராளமான போதனைகள் உள்ளன. உதாரணமாக, குலைனி குறிப்பிடுகின்றார், 'இமாம் முஹம்மது பாக்கர் (ரஹ்) கூறுகிறார், 'மூஸா (அலை) எகிப்தில் உள்ள ரம்லா நகரில் தனது இஹ்ராமைத் தொடங்கி, ஒட்டகத்தின் மீது ஏறி, இரண்டு துண்டு பருத்தி ஆடைகளை அணிந்து மலைகளின் அடிவாரத்தைத் தாண்டி, 'லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்' என்று ஓதினார். அதற்கு மலைகள் பதிலளிக்க ஆரம்பித்தன'.

மற்றொரு இடத்தில் இமாம் முகமது பாக்கர் (ரஹ்) இமாம் அலி (ரலி) தம் தோழர்களிடம் இந்த வார்த்தைகளில் பேசியதை மேற்கோள் காட்டியுள்ளார்: 'ஒரு யாத்ரீகர் 'லப்பைக்' என்று முழங்கத் தொடங்கும் போது, அவரது வலது மற்றும் இடதுபுறத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அவருடன் (இணைந்து) முழங்குகின்றன. அவரை நோக்கி இரண்டு மலக்குகள் 'அல்லாஹ்வின் அடியாரே, உங்களுக்கு நற்செய்தி, இதற்காக அல்லாஹ் சுவனத்தைத் தராமல் இருக்க மாட்டான்' என்று கூறுவார்கள்.

இந்த குணாதிசயங்கள் மனிதனின் உலகக் கண்ணோட்டத்திலும் வாழ்க்கையிலும் நிச்சயமாக அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இறைதூதர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பூமியில் சர்வ வல்லமையுள்ள இறைவனின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும், ஓர் இறையச்சமுள்ள முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முயற்சிக்கும் போது, முழு உலகமும் அவரை ஆதரிக்க தொடங்குகிறது என்பதைக் குறிக்கிறது.

எனவே, ஹஜ் என்பது பலதரப்பட்ட பார்வை கோணங்களை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கும், ஒற்றுமை, சமநிலை, நிதானம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நடைமுறை பாதையை வகுப்பதற்காக ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்கும் தூய இறைவழிபாடு என்று முடிவு செய்யலாம்.

ஒரு முழுமையான ஒற்றுமை இல்லாத நிலையில் இஸ்லாமிய உம்மத் (சமூகம்) என்ற கருத்து வடிவம் பெறுவதில்லை. அதாவது, இஸ்லாமிய உம்மா இஸ்லாமிய ஒற்றுமையாலேயே வகைப்படுத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்லாமிய உம்மா ஒற்றுமை அற்றிருப்பின் சர்வ வல்லமையுள்ள இறைவன் மீதான உண்மையானதும் உறுதியானதுமான நம்பிக்கைகளைக் கூட ஒருவேளை இழக்க நேரிடலாம்.

கலாநிதி பி. மோஅஸமி கூதர்ஸி
கலாசார கவுன்சிலர்,
ஈரான் கலாசார நிலையம், கொழும்பு


Add new comment

Or log in with...